இந்திய, சீன எல்லை பகுதியில் உள்ள 5 இடங்களில் சீன ராணுவ வீரர்களுக்கு இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் இனிப்பு வழங்கி தீபாவளி கொண்டாடினர். இந்திய, சீன எல்லை பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்தில் ஈடுபடுவது குறித்து இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.


சீன ராணுவ வீரர்களுக்கு தீபாவளி ட்ரீட்:


இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாப்படும் பண்டிகைகளில் மிக மிக முக்கியமானது தீபாவளி பண்டிகை ஆகும். பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.


கடந்த சில நாட்களாகவே தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறுவர்களும், இளைஞர்களும் ஆர்வத்துடன் பட்டாசு வெடித்து வந்தனர். இன்று தீபாவளி பண்டிகை என்பதால் காலை முதலே பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 


இந்த நிலையில், இந்திய, சீன எல்லை பகுதியில் சீன ராணுவ வீரர்களும், இந்திய பாதுகாப்பு படை வீரர்களும் இனிப்பு பரிமாறி தீபாவளி கொண்டாடினர். லடாக்கில் சுஷுல் மால்டோ மற்றும் தௌலத் பெக் ஓல்டி, பாஞ்சா (கிபுட்டுக்கு அருகில்) மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் பும்லா மற்றும் சிக்கிமில் நாதுலா ஆகிய பகுதிகளில் சீன ராணுவ வீரர்களுடன் இணைந்து இந்திய ராணுவ வீரர்கள் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர்.


முடிவுக்கு வந்த இந்திய சீன எல்லை பிரச்னை:


சீனா, இந்திய நாடுகளுக்கு இடையேயான மோதல் சமீபகாலமாக பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக, டோக்லாம் பிரச்னை வெடித்ததில் இருந்து, இந்திய - சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே பலமுறை மோதல் வெடித்தது.


இந்திய - சீன - பூட்டான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள டோக்லாமில் சீனா சாலைகளை அமைக்க இந்தியாவும் பூட்டானும் எதிர்ப்பு தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 2020ஆம் ஆண்டு, கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்கள் மோதி கொண்டனர்.


இதில், இருதரப்பிலும் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இப்படி பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், கடந்த வாரம் இரு தரப்புக்கு இடையே எல்லைப் பகுதியில் ரோந்தில் ஈடுபடுவது குறித்து ஒப்பந்தம் கையெழுத்தானது.


இதையடுத்து, சர்ச்சைக்குரிய எல்லை பகுதிகளில் இருந்து இரு நாட்டு ராணுவ வீரர்களும் பின்வாங்கினார். இப்படிப்பட்ட சூழலில், தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது இரு நாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை குறிக்கிறது.