இந்திய ராணுவத்தின் கேப்டன் சரியா அப்பாஸி அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் உள்ள இந்திய சீன எல்லையில் புதிதாக மேம்படுத்தப்பட்ட அதி நவீன எல்-70 ரக பீரங்கிகள் வைக்கப்பட்டிருப்பது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார். 


இந்தியா - சீனா எல்லையில் உள்ள மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகியவற்றில் சீன ராணுவம் தொடர்ச்சியாக கிராமங்களுக்குள் சட்ட விரோதமாக நுழைவது, அங்குள்ள மக்கள் வாழும் இடங்களில் ராணுவ அணிவகுப்புகள் நடத்துவது எனத் தொடர்ந்து இந்திய நிலப்பரப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது. அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், லடாக் ஆகிய மாநிலங்களின் எல்லைகளின் வழியாக இந்தியாவுக்குள் அடிக்கடி நுழையும் சீன ராணுவம் அதன் ஒருங்கிணைந்த ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்வது, அப்பகுதிகளில் ரிசர்வ் ராணுவத்தினரைக் கொண்டு நிரப்புவது முதலான சட்டவிரோத செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. 



இந்திய சீன எல்லையில் எது நிகழ்ந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் இந்திய ராணுவம் முழுவதுமாகத் தயார் நிலையில் இருப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் நிலப்பரப்பையும், வடகிழக்கு மாநிலங்களையும் இணைக்கும் `கோழியின் கழுத்து’ என வர்ணிக்கப்படும் சிலிகுரி பகுதி கைப்பற்றப்பட்டால் மிகவும் ஆபத்தாக மாறும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் சிலிகுரி பகுதி கண்காணிக்கப்பட்டு வருகிறது. 


இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியின் அருகில் இருக்கும் இந்திய சீன எல்லைப் பகுதியில் உள்ள இடத்தில் தற்போது புதிதாக மேம்படுத்தப்பட்ட அதி நவீன எல்-70 ரக பீரங்கிகளும், பிற ஆயுதங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய இரு மாநிலங்களில் இந்தியா சீனா எல்லை சுமார் 1346 கிலோமீட்டர்கள் வரை இருக்கிறது. மேலும், கடந்த ஆண்டு முதல் சீனாவின் செம்படை இந்த நீண்ட எல்லையில் சில முக்கியமான இடங்களில் தளவாடங்கள் ஆக்கிரமிப்பது, ராணுவத்தினர் நடமாட்டத்தை ஊக்குவிப்பது முதலானவற்றைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 17 மாதங்களாக இந்தியாவும், சீனாவும் தங்கள் ராணுவங்களை எதிரெதிரில் நிறுத்தி வைத்திருக்கும் நிலையில், இந்திய அரசு சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி எல்லையோர பாதுகாப்புக்கான ஒப்பந்தங்களை மீளாய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 



சீன ராணுவம் எந்த வழியிலும் இந்திய எல்லைக்குள் நுழைந்து விடாமல் இருக்க பகல், இரவு ஆகியவற்றைப் பாராமல் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆளில்லா விமானங்களையும் இந்தப் பணிகளுக்காக இந்திய ராணுவம் பயன்படுத்தி வருகிறது. ஹெரான் என்றழைக்கப்படும் இந்த ஆளில்லா சிறிய விமானங்கள் மலையுச்சிகளில் பறக்கும் திறன்வாய்ந்தவை. இஸ்ரேல் நாட்டில் உற்பத்தி செய்யப்படுபவை. 


நவீன தொழில்நுட்பங்களுடன் சீனாவை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பது, மீண்டும் ஒரு போர் நிலையை உருவாக்கும் என எல்லையோரப் பகுதிகளில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.