உத்தரப்பிரதேசத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்ற நபரை கடைசி நேரத்தில் போலீசார் காப்பாற்றிய பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் கெளசாம்பி மாவட்ட போலீசாரின் 112 அவசர எண்ணுக்கு பதட்டமான குரலில் போன்கால் வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய சிறுமி ஒருவர் என்னுடைய அண்ணன் வீட்டில் இல்லை. அப்பா மட்டுமே இருக்கிறார். அங்கு ஏதோ விபரீதம் நடக்கிறது. உடனடியாக சென்று பார்க்க முடியுமா எனக் கேட்டுள்ளார்.  


சிறுமியின் பதட்டத்தையும், அவசரத்தையும் புரிந்துகொண்ட போலீசார் உடனடியாக சிறுமி சொன்ன இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். கிட்டத்தட்ட 3 கிமீ தூரத்தை 3 நிமிடத்தில் கடந்து அந்த ஏரியாவுக்கு சென்று பார்த்துள்ளனர். அந்த சிறுமி சொன்ன வீடு உட்புறமாக பூட்டி இருந்துள்ளது. ஜன்னல் வழியாக பார்த்த போலீசாருக்கோ அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டுக்குள் ஒரு பெரியவர் கயிறு மூலம் தூக்கிட்டு தொங்கத் தொடங்கியுள்ளார். 




தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து என்பதை  உணர்ந்த போலீசார் வேறு வழியின்றி அதிவேகமாக கதவை மோதியே உடைத்துள்ளனர். கடைசி நேரத்தில் விரைந்து செயல்பட்டு மயக்கத்தில் இருந்த பெரியவரை கயிற்றில் இருந்து காப்பாற்றியுள்ளனர். பெரியவர் மயக்கத்தில் இருந்ததால் முகத்தில் தண்ணீர் தெளித்துள்ளனர். அவருக்கு மூச்சு இருப்பதை தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் சென்றுள்ளனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு அந்த பெரியவர் காப்பாற்றப்பட்டுள்ளார். 
இது குறித்து தெரிவித்துள்ள போலீசார், '' அவசர உதவி அழைப்புக்கு திங்கள் கிழமை மதியம் 2.10 மணிக்கு அழைப்பு வந்தது. 


குரலில் ஒரு பதட்டமும் , அவசரமும் தெரிந்தது. உடனடியாக அவர்கள் சொன்ன இடத்துக்கு 3 நிமிடத்தில் சென்றோம். வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது பெரியவர் தூக்கில் தொங்கியபடி இருந்தார். வீடு உட்புறமாக பூட்டி இருந்தது. அங்கு நின்ற கிராமத்தினர் சிலரும் அவர் இறந்துவிட்டதாக நினைத்து நின்றுகொண்டிருந்தனர். ஆனால் அவருக்கு உயிர் இருக்குமென நினைத்தோம். அவசரமாக கதவை உடைத்து உள்ளே நுழைந்தோம். கடைசி நேரத்தில் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டபிறகு அவர் நலமாக இருக்கிறார் என்றார்.




தன்னுடைய தந்தை காப்பாற்றப்பட்டது குறித்து பேசிய மகன், '' என்னுடைய அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையே பிரச்னை நிலவி வந்தது. நானும் ஊரில் இல்லை. என்னுடைய தங்கை போன் செய்து என்ன நடந்தது என தெரிவித்தார். எனக்கு ஏதோ தவறாக இருந்தது. ஊராரிடம் உதவி கேட்டு நேரத்தை வீணாக்காமல் உடனடியாக நீ போலீசாருக்கு அழைப்பு விடு என தெரிவித்தேன். நான் நினைத்தது போலவே போலீசார் சரியான நேரத்துக்கு சென்று அப்பாவை காப்பாற்றிவிட்டனர் என்றார்.


பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் கோரிக்கையின்படி அவர்களது எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.


‛பெட்ரோல் லிட்டர் ரூ.200 ஐ தொட்டால் பைக்கில் ‛ட்ரிபிள்ஸ்’ போக அனுமதி’ -அசாம் மாநில பாஜக தலைவர்!