பயங்கரவாதிகள் தோட்டாக்களை வீசினால் பீரங்கு குண்டுகளால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்தியாவின் பெண் சக்திக்கு பயங்கரவாதிகள் விடுத்த சவால் அவர்களுக்கு சாவு மணியாக மாறி உள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பயங்கரமாக பஞ்ச் பேசிய மோடி:
லோக்மாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் 300ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "சிந்தூர் இப்போது நாட்டில் வீரத்தின் அடையாளமாக மாறிவிட்டது. நீங்கள் தோட்டாக்களை வீசினால், பீரங்கி குண்டுகளால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும்.
கலாச்சாரம் மற்றும் மரபுகளைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. நமது பாரம்பரியத்தில் பெண் சக்தியின் சின்னமாக சிந்தூர் உள்ளது. ராம பக்தியில் மூழ்கிய ஹனுமான், சிந்தூரத்தை பூசி கொள்வார். சக்தி பூஜையில் நாங்கள் சிந்தூரம் வழங்குகிறோம். இந்த சிந்தூர் துணிச்சலின் அடையாளமாக மாறிவிட்டது.
பஹல்காமில் பயங்கரவாதிகள் இந்தியர்களின் ரத்தத்தை மட்டும் சிந்தவில்லை. நமது கலாச்சாரத்தையும் தாக்கினர். அவர்கள் நமது சமூகத்தைப் பிளவுபடுத்த முயன்றனர். இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், பயங்கரவாதிகள் இந்தியாவின் பெண்கள் சக்திக்கு சவால் விடுத்துள்ளனர்.
"தீவிரவாதிகளுக்கு அடிக்கப்பட்ட சாவு மணி"
இந்த சவால் பயங்கரவாதிகளுக்கும் அவர்களைக் கையாளுபவர்களுக்கும் சாவு மணியாக மாறியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான நடவடிக்கையாக ஆபரேஷன் சிந்தூர் உள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலையில், நமது ராணுவம் பயங்கரவாதிகளின் மறைவிடங்களை அழித்தது. இந்த முறை, 75 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகியுள்ளனர். இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதே எங்கள் முயற்சி.
இதுதான் நாரி சக்தி வந்தன் ஆதினியத்தின் பின்னணியில் உள்ள உத்வேகம். நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பெண்கள் இடஒதுக்கீடு இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் பொருள் என்னவென்றால் பாஜக அரசு நமது சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு ஒவ்வொரு மட்டத்திலும், ஒவ்வொரு துறையிலும் அதிகாரம் அளித்து வருகிறது. இன்று தேசப் பாதுகாப்பில் இந்தியாவின் மகள்களின் திறனை உலகம் காண்கிறது.
இதற்காக, கடந்த பத்தாண்டுகளில் அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பள்ளியிலிருந்து போர்க்களம் வரை, இன்று நாடு அதன் மகள்களின் துணிச்சலில் முன்னெப்போதும் இல்லாத நம்பிக்கையைக் கொண்டுள்ளது" என்றார்.