கேரள தலைநகர் திருவனந்தபுரத்தின் மாநகராட்சி மேயராக இருந்து வருபவர் ஆர்யா ராஜேந்திரன். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவர் வெற்றி பெற்று திருவனந்தபுரத்தின் மேயராக 21 வயதில் பதவியேற்றார். இதன்மூலம் இந்தியாவிலேயே மிகவும் குறைந்த வயதில் மேயராக பதவியேற்றவர் என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில் இவருக்கும் கேரளாவின் பாலுசேரி தொகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ சச்சின் தேவிற்கும் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆர்யா ராஜேந்திர மற்றும் சச்சின் தேவ் ஆகிய இருவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலசங்கம் பிரிவில் இருந்து ஒன்றாக இருந்து வந்தனர். அதன்பின்னர் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐயில் இருவரும் ஒன்றாக பணியாற்றி வந்தனர்.
அங்கு இவர்கள் இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்ட நிலையில் இருவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இருவருக்கும் இன்று திருவனந்தபுரத்தில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆர்யா ராஜேந்திரன் மலையாளத்தில் பிரபல எழுத்தாளரான பஷீரின் கவிதையை பகிர்ந்துள்ளார்.
“துக்கங்களை சேர்த்து வைக்கும்போதும் காதல் நிகழும் என்று உன்னிடம் பேச ஆரம்பித்த பிறகு தான் தெரிந்தது! - பஷீர்”
என்பதை பதிவிட்டுள்ளார்.
தற்போதைய கேரள சட்டப்பேரவையில் மிகவும் இளம் வயது எம்.எல்.ஏ சச்சின் தேவ்தான். இவர் கோழிக்கோடு பகுதியில் உள்ள கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்று, அதன்பின்னர் கோழிக்கோடு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றவர். ஆர்யா ராஜேந்திரன் புனித செயிண்ட் கல்லூரியில் பிஎஸ்.சி பட்டப்படிப்பு படித்துள்ளார். கேரளாவின் முடுவாங்கால் வார்ட்டில் ஆர்யா ராஜேந்திரன் யுடிஎஃப் வேட்பாளர் ஶ்ரீகலாவை 2872 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று திருவனந்தபுரத்தின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்