பொதுவாக பாம்புகள் நிறைந்த நாடு, எங்கு நோக்கினும் குடிசைகள், அழுக்கு, நாற்றம், ஏழ்மை, வறுமை, பட்டினியோடு இளம் சிறார்கள்- இவைதான் இந்தியா என மேற்கத்திய ஊடகங்களில் பார்த்து, பார்த்துப் போன புளித்துப் போன நம் கண்களுக்கு தற்போது தெம்பூட்டும் செய்திகள் தொடர்ந்து வருகின்றன. அதில் “லேட்டஸ்ட்” இணைப்புதான், இளம் தொழில் அதிபர் ஜெய் கோடக்கின் அசத்தல் ட்விட்டர் பதிவுகள்.


• இந்தியாவெல்லாம் வேலைக்கு ஆகாது… அமெரிக்கா போல வருமா  என பேசியதெல்லாம் பழங்கதை என்பதை, தற்போது உதாரணங்களுடன் விளக்கி இருக்கிறார் ஜெய் கோடக்.






• நேற்றைய தினம், அவர் படித்த புகழ்பெற்ற அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களின் ஒன்றிணைப்பின் 5வது ஆண்டு விழாவிற்கு சென்றுவிட்டு, இந்தியா திரும்பும் போது, பரபரப்பான பாஸ்டன் நகரத்தின் விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். 


• வந்தவருக்கு பெரும் அதிர்ச்சி. ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் அல்ல, கிட்டத்தட்ட 5 மணி நேரம் ஆகியும் விமான நிலையத்திற்குள்  “செக் இன்” ஆக முடியவில்லை. அந்த அளவுக்குக் கூட்டம், சரியான முறையில் திட்டமிடல் இல்லாமல் கூச்சல் குழப்பம் என பெரும் அலைக்கழிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நேரடி காட்சிகளைத்தான், தற்போது இந்தியாவின் இளம் தொழில் அதிபர்களில் ஒருவரான ஜெய் கோடக், தமது டிவிட்டரில் கருத்துகளாகப் பதிவேற்றம் செய்துள்ளார். 






• “அமெரிக்காவில் விலைவாசி அதிகரிக்கிறது, பணவீக்கம் கிடுகிடுவென உயர்கிறது, நகரங்கள் பொலிவிழுந்து அசுத்தங்கள் காணப்படுகின்றன. துப்பாக்கி கலாச்சாரத்தால் பாதிக்கப்படும் சமூகம், தினமும் வன்முறை சம்பவங்கள் என்பது தலைப்புச் செய்திகளாக மாறுகின்றன. விமான  நிலையங்களுக்கு வந்தால், நீண்ட வரிசை, மணிக்கணக்கில் காத்திருப்பு, காலதாமதமாக வரும் விமானங்கள் என அமெரிக்காவே சிதைந்துக் கொண்டிருக்கிறது” எனவும் எதிர்மறையான சிந்தனைகளே சராசரி மனிதர்களிடம் காணப்படுகிறது எனவும் ஜெய் கோடக் குறிப்பிட்டுள்ளார்.






• இந்தச் சூழலில், இந்தியாவிற்குச் செல்வதை, ஒரு சிறந்த இடத்திற்குச் செல்வது போல் உணர்கிறேன். பாஸ்டன் நகரை விட, அதிகப்பயணிகளை மும்பை விமான நிலையம் கையாளுகிறது. பயணிகள் வரிசை வேகமாகவும் செல்கிறது. பெரிய தாமதங்கள் ஏற்படுவதில்லை, கட்டணமும் குறைவு, சுத்தமாகவும் சிறப்பாகவும் இருக்கிறது என இந்திய நகரத்தை சுட்டிக்காட்டி, அமெரிக்காவுடன் மறைமுகமாக ஒப்பிட்டு, தொழில் அதிபர் ஜெய் கோடக் எழுதிய ட்விட்டர் பதிவு தற்போது பெரும் வைரலாக, சமூக வலைத்தளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. 


• இந்த இளம் தொழில் அதிபர் ஜெய் கோடக் யார் என்று தெரியாதவர்களுக்கு ஒரு சிறு அறிமுகம். இந்தியாவின் பிரபல வங்கிகளில் ஒன்றான கோடக் மகிந்திரா வங்கியின் நிறுவனரும் தலைமை செயல் நிர்வாகியுமான கோடீஸ்வரர் உதய் கோடக்கின் மகன்தான் இந்த ஜெய் கோடக். இந்த வங்கியின் இணையப் பிரிவின் முக்கிய நிர்வாகியாக இருக்கும் ஜெய் கோடக், விரைவில் கோடக் வங்கியின் தலைவராக வரப்போகிறார் எனக் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஜெய் கோடக்தான், தமக்கு ஏற்பட்ட பாதிப்பை பதிவு செய்ததன் மூலம், அமெரிக்காவை வெச்சு, தரமான சம்பவம் செய்துவிட்டார் என சமூக வலைதங்களில் தற்போது வைரலாகப் பேசப்படுகிறது. 


• இந்தவொரு சம்பவத்தால், அமெரிக்காவின் வசதி, வாய்ப்புகள்,  தலைகீழாக மாறிவிட்டது எனக் கூற முடியாவிட்டாலும், இந்தியாவின் வசதி, வாய்ப்புகள் சிறப்பாக மாறி வருகின்றன என்பதை மட்டும் நம்மால் உறுதியாக கூற முடிகிறது என்பதையே இந்த  பதிவுகள் எடுத்துக்காட்டுவதாக சமூக வலைஞர்களின் பதிவுகள் எதிரொலிக்கின்றன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண