ஆசியாவில் மிக நீளமான தந்தங்களை கொண்ட 70 வயது யானையான ’போகேஸ்வரா’ உயிரிழந்தது. ஆசியாவிலேயே நீண்ட தநதங்களைக் கொண்ட இந்த யானையின் இறப்புக்கு வனவிலங்கு ஆர்வலர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


தந்தங்கள்


ஒரு தந்தம் 8 அடி நீளம் (2.54 மீட்டர்) மற்றொரு தந்தம் (7.5 அடி) நீளம் என கிட்டத்தட்ட தரையைத் தொடும் தந்தங்களுடன் கம்பீரமாக அடர்ந்த காட்டில் சுற்றித் திரிந்த யானை போகேஸ்வராவை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து வந்தனர். 


 






இந்நிலையில்,  நேற்று முன் தினம் (ஜூன் 11)  பந்திப்பூர்-நாகர்ஹோல் காப்புக் காட்டில் உள்ள கபினி நீர்த்தேக்கத்தின் அருகே, போகேஸ்வரா யானை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.


மிஸ்டர் கபினி


'மிஸ்டர் கபினி’ என்று அனைவராலும் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட யானை போகேஸ்வரா, யாரையும் தொந்தரவு செய்யாத தன் நட்பு பாராட்டும் குணத்தாலும் மக்களை வெகுவாகக் கவர்ந்து வந்தது.


கபினி, உப்பங்கழிக்கு அருகில் உள்ள போகேஸ்வரா முகாமுக்கு அருகில் அடிக்கடி இந்த யானை காணப்பட்ட நிலையில் இதற்கு போகேஸ்வரா என்று பெயரிடப்பட்டது.




இந்நிலையில், யானைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அதன் சின்னமாக போகேஸ்வராவை உருவாக்க வனத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.


மேலும், வனவிலங்கு கண்காட்சி மையத்தில் யானை போகேஸ்வராவின் தந்தங்களைப் பாதுகாக்க அனுமதி பெறவும் வனத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.


இயற்கை மரணம்


முன்னதாக யானை போகேஸ்வராவின் உள்ளுறுப்பு மாதிரிகள் மைசூருவில் உள்ள மண்டல தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில், யானை இயற்கை மரணம் எய்தியது கண்டறியப்பட்டது.


இந்நிலையில், யானை போகேஸ்வராவுக்கு வனத்துறை அலுவலர்கள், விலங்கு ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தியும், இளைய தலைமுறையினர் இனி இந்த யானையை தொலைக்காட்சிகள், வீடியோக்களில் மட்டுமே பார்க்கக்கூடும் என வருத்தம் தெரிவித்தும் வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண