Indias Millionaires Report:  இந்தியாவில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடம் பிடித்துள்ளது.

Continues below advertisement


இந்தியாவில் கோடீஸ்வரர்களின் தலைநகரம்:


அதிக சொத்துகளை கொண்டவர்களை உள்ளடக்கிய மாநிலங்களில், மகாராஷ்டிரா முதன்மையானதாக திகழ்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஹுருன் இந்தியா செல்வ அறிக்கை 2025 இன் படி, அந்த மாநிலத்தில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 600 கோடீஸ்வர குடும்பங்கள் உள்ளன. கடந்த 2021ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 194 சதவிகிதம் அதிகமாகும். 


2020-21 முதல் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 55 சதவீத உயர்வால் மாநிலத்தின் வளர்ச்சி வலுவாக ஆதரிக்கப்படுகிறது. அதன்படி மும்பை மட்டும் ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடீஸ்வர குடும்பங்களை கொண்டு, இந்தியாவின் கோடீஸ்வரர்களுக்கான தலைநகரம் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.



இந்தியாவின் ஒட்டுமொத்த கோடீஸ்வரர்கள்:


இந்தியாவில் தற்போது ஒட்டுமொத்தமாக 8 லட்சத்து 71 ஆயிரத்து 700 கோடீஸ்வர குடும்பங்கள் உள்ளன. அவை சராசரியாக சுமார் ரூ.8.5 கோடி அல்லது அதற்கும் அதிகமான சொத்து மதிப்புகளை கொண்டவையாக உள்ளன. இது கடந்த 2021ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 90 சதவிகிதம் அதிகமாகும். இதில் நாடு தழுவிய வளர்ச்சி இருந்தாலும், ஒட்டுமொத்த செல்வந்தர்களின் பட்டியலில் 79 சதவிகிதம் பேர் வெறும் 10 மாநிலங்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.  


கோடீஸ்வரர்களை அதிகம் கொண்ட மாநிலங்கள்:



  • மகாராஷ்டிரா - 1,78,600 கோடீஸ்வரர்கள்

  • டெல்லி - 79,800 கோடீஸ்வரர்கள்

  • தமிழ்நாடு - 72,600 கோடீஸ்வரர்கள்

  • கர்நாடகா - 68,800 கோடீஸ்வரர்கள்

  • குஜராத் - 68,300 கோடீஸ்வரர்கள்

  • உத்தரபிரதேசம் - 57,700 கோடீஸ்வரர்கள்

  • தெலங்கானா - 51,700 கோடீஸ்வரர்கள்

  • மேற்குவங்கம் - 50,400 கோடீஸ்வரர்கள்

  • ராஜஸ்தான் - 33,100 கோடீஸ்வரர்கள்

  • ஹரியானா - 30,500 கோடீஸ்வரர்கள்


கோடீஸ்வரர்களை அதிகம் கொண்ட நகரங்கள்:


நாட்டிலேயே அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நகரங்களின் பட்டியலில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மும்பை மற்றும் புனே என்ற இரண்டு நகரங்கள் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதன்படி,



  • மும்பை - 1,42,200 கோடீஸ்வரர்கள்

  • டெல்லி - 68,200 கோடீஸ்வரர்கள்

  • பெங்களூரு - 31,600 கோடீஸ்வரர்கள்

  • அகமதாபாத் - 26,800 கோடீஸ்வரர்கள்

  • கொல்கத்தா - 26,600 கோடீஸ்வரர்கள்

  • சென்னை - 22,800 கோடீஸ்வரர்கள்

  • புனே - 22,500 கோடீஸ்வரர்கள்

  • ஐதராபாத் - 19,800 கோடீஸ்வரர்கள்

  • குருக்ராம் - 10,100 கோடீஸ்வரர்கள்

  • சூரத் - 5,700 கோடீஸ்வரர்கள்


ஒரே இடத்தில் குவியும் செல்வம்...


இந்த ஆய்வறிக்கை தொடர்பாக ஹுருன் இந்தியாவின் நிறுவனர் மற்றும் தலைமை ஆராய்ச்சியாளரான அனஸ் ரஹ்மான் ஜுனைத் பேசுகையில், "10 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், 1 மில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்புள்ள இந்திய குடும்பங்களின் எண்ணிக்கை 445 சதவிகிதம் உயர்ந்துள்ளது, இது நமது சமூகத்தின் பரந்த அடித்தளத்தை செல்வம் எவ்வாறு அடைகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


இருப்பினும், 2017 ஆம் ஆண்டின் மில்லியனர்களில் சுமார் 5 சதவீதம் பேர் மட்டுமே மிக உயர்ந்த நிகர சொத்து  மதிப்புள்ள நபர்களாக தற்போது மாறியுள்ளனர். வெறும் 0.01 சதவிகிதம் பேர் மட்டுமே பில்லியனர் அந்தஸ்தைப் பெற்றுள்ளனர். செல்வம் பரவி வரும் அதே வேளையில், உச்சத்தை நோக்கிய ஏற்றம் மெல்லியதாகவே உள்ளது என்பதை இது காட்டுகிறது" என குறிப்பிட்டுள்ளார். அதாவது, நாடு முழுவதும் செல்வம் வளர்ந்து வரும் அதே வேளையில், அது ஒரு சில பொருளாதார மையங்களில் மட்டுமே குவிந்து வருகிறது என்பதையும் இந்த அறிக்கை விளக்குகிறது.