அக்னி 5 ஏவுகணையின் இரவு நேர சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவு ஏவு தளத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்கக் கூடியது அக்னி 5 ஏவுகணை. இது 5000 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று தாக்கக் கூடியது.


இந்நிலையில் ஏவுகணையை இரவு நேரத்தில் ஏவி சோதனை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, அரசுத் தரப்பில் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை முன்பைவிட எடை குறைவாக செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ஏவுகணையை இன்னும் கூட மேம்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஏவுகணையை எடை குறைப்பு செய்ய காம்போசைட் மெட்டீரியல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட 5000 கிமீ தூரத்தையும் தாண்டி சென்று தாக்க இயலும். 


'நைட் ஆபரேஷன் மோட்' முறையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இது செலுத்தப்பட்ட போது, ஏவுகணையின் திசை மற்றும் வேகம் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இருந்ததால் பதினைந்து நிமிடங்களில் இலக்கைத் தாக்கியது.


குறைந்தது 5500 கி மீ தூரம் வரை செல்லக்கூடிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைக்கு இணையானது இது.


இந்த வெற்றிகரமான சோதனையானது இப்போது இந்த ஏவுகணை முற்றிலும் பயன்படுத்தத் தயார் நிலையில் உள்ளது என்பதையும் குறிக்கிறது.






அக்னி-5 ஏவுகணை என்பது என்ன?


இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஐயாயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை வெற்றிகரமாக நீண்ட தூரம் சென்று வெற்றிகரமாகத் தாக்கக்கூடிய ஏவுகணை இது.


அதாவது, கிட்டத்தட்ட முழு சீனா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகள் இந்த ஏவுகணை வரம்பில் வரும்.


அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட ஐம்பதாயிரம் கிலோ எடை கொண்ட இந்த ஏவுகணை 1500 கிலோ எடையுள்ள ஆயுதத்தைச் சுமந்து செல்லக்கூடியது. அதாவது இந்தியாவின் சக்தி வாய்ந்த ஏவுகணைகளில் இதுவும் ஒன்று.



இந்தியா 1989 ஆம் ஆண்டு அக்னி-1 ஏவுகணை மூலம் அக்னி தொடர் ஏவுகணைகளைச் சோதிக்கத் தொடங்கியது. அக்னி-1 1000 கி மீ செல்லக்கூடிய நடுத்தர தூர ஏவுகணையாகும். அப்போது அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மட்டுமே பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருந்தன.