உலக வர்த்தக அமைப்பு மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியங்களைத் தடை செய்ய வேண்டும் என முன்வைத்திருக்கும் தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்து வருகிறது இந்திய அரசு. `இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாது’ என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். 


மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல், `இந்தியா இந்த விவகாரத்தில் 25 ஆண்டுகள் அவகாசம் கோரியிருப்பதை நிரந்தரமாகக் கருத வேண்டாம். மீனவர்களுக்கு மானியம் வழங்குவது இந்தியாவுக்கும், மீன்பிடித் தொழில் அதிகம் நடைபெறும் நாடுகளுக்கும் மிகவும் தேவையானது. 25 ஆண்டுகள் வரை மாறுவதற்கான கால அவகாசம் வழங்கப்படாமல் பேச்சுவார்த்தைகளில் உடன்பாட்டை எட்டுவது எங்களால் முடியாது.. நீண்ட கால வளர்ச்சிக்கும், குறைந்த ஊதியம் பெறும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் இது தேவையானது. எனவே, இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியா தற்போதுள்ள ஒப்பந்தத்தை எதிர்ப்பதன் காரணம் இதுதான்’ எனக் கூறியுள்ளார். 



மெக்சிகோ நாட்டின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான செயலாளர் லூஸ் மரியா டி லா மோரா இதுகுறித்து பேசிய போது, `இந்தியத் தரப்பு அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.. பேச்சுவார்த்தை மேற்கொள்ள வந்துவிட்டு, இவற்றைப் பேச முடியாது என இந்தச் சூழலில் சொல்ல முடியாது’ எனக் கூறியுள்ளார். 







ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் வால்டிஸ் டோம்ட்ரோவ்ஸ்கிஸ், `சில நாடுகள் பலமான நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள்.. நீண்ட காலத்திற்கான கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். இந்த ஓப்பந்தம் உலகம் முழுவதும் மீன் கிடைப்பதை எளிதாக்குவதோடு, மானியங்கள் வழங்கி மீன்பிடித் தொழிலை மோசமாகக் கையாள்வதைத் தடுப்பதற்கான இந்த ஒப்பந்தத்தின் நோக்கத்தை பலவீனப்படுத்துகின்றனர்’ என இதுகுறித்து கூறியுள்ளார். 


இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல், `இந்தியா அதன் மீனவர்களுக்கு ஆதரவாக நிற்கிறது!’ எனப் பதிவிட்டுள்ளார். மேலும், மீன்பிடித் தொழிலுக்கு வழங்கப்படும் மானியங்கள் காரணமாக சமமான போட்டியை உருவாக்குவதாகவும், இது சர்வதேச மீன்பிடித் தொழிலுக்கு முதுகெலும்பாக இயங்குவதாகவும் அவர் உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் பேசியதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.