இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் சுதந்திரம் பெற்றதில் இருந்தே இரண்டு நாடுகளுக்கும் முக்கிய பிரச்னையாக இருந்து வருவது காஷ்மீர் விவகாரம். காஷ்மீர் தனக்குதான் சொந்தம் என பாகிஸ்தான் உரிமை கொண்டாடி வரும் நிலையில், இந்தியா அதை தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகிறது. 


குறிப்பாக, காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அமைப்புகளில் பாகிஸ்தான் பல முறை எழுப்பியுள்ளது. ஆனால், இது உள்நாட்டு விவகாரம் என்றும் காஷ்மீரில் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் வளர்த்து வருவதாகவும் இந்தியா குற்றஞ்சாட்டி வருகிறது.


ஐநாவிவ் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான்:


இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் காபந்து பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் எழுப்பியது இந்தியாவை கோபமடைய செய்துள்ளது. ஐ.நா. பொதுச்சபையின் 78ஆவது அமர்வில் நேற்று கலந்து கொண்டு பேசிய அன்வருல் ஹக், "இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையே அமைதிக்கான திறவுகோலாக காஷ்மீர் உள்ளது" என்றார்.


இதற்கு பதிலடி அளித்துள்ள இந்தியா, "ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் தொடர்பான விஷயங்கள் முற்றிலும் உள்நாட்டு தொடர்பானவை. இந்திய உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் கருத்து தெரிவிக்க கூடாது" என கூறியுள்ளது. 


பதிலடி தந்த இந்தியா:


ஐ.நா.வுக்கான இந்தியாவின் முதன்மை செயலர் பெடல் கெலாட், இதுகுறித்து விரிவாக பேசுகையில், "இந்தியாவுக்கு எதிராக அடிப்படை ஆதாரமற்ற, தீங்கிழைக்கும் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு இந்த மதிப்பிற்குரிய அவையை பாகிஸ்தான் தவறாகப் பயன்படுத்துவது தொடர் கதையாகிவிட்டது.


மனித உரிமைகள் விவகாரத்தில் மோசமாக செயல்பட்டு வரும் பாகிஸ்தான் உலகின் கவனத்தை திசை திருப்பவே இவ்வாறு செய்கிறது. பயங்கரவாதத்தின் உள்கட்டமைப்பை பாகிஸ்தான் உடனடியாக மூட வேண்டும். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். 


ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் தொடர்பான விவகாரங்கள் முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை. நமது உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு அதிகாரம் இல்லை. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை நோக்கி விரல் நீட்டுவதற்கு முன் பாகிஸ்தான் தனது சொந்த வீட்டை ஒழுங்கமைப்பது நல்லது" என்றார்.


கடந்த ஆகஸ்ட் மாதம், பாகிஸ்தான் பைசலாபாத் நகரில் தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டதை மேற்கோள் காட்டி பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் முதன்மை செயலர், "சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. 


ஒவ்வொரு ஆண்டும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 1,000 பெண்கள் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்யப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.


இதையும் படிக்க: Asian Games 2023: ஆசிய போட்டிகள்.. அருணாச்சல பிரதேச வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுப்பு; இந்தியா கடும் எதிர்ப்பு