நாடும் முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு பூதாகரம் எடுத்துள்ளது. நிலக்கரி சுரங்கங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக இந்தியாவில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி கடந்த சில மாதங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு காரணமாகவும் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யக்கூடிய 135 மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இந்த மின் நிலையங்கள் ஒன்றன் பின் ஒன்றாக விரைவில் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்தியா கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக்குறைவான அளவிலேயே வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்திருக்கிறது. இதுவும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் உலகளவில் நிலக்கரி விலை 40% அதிகரித்துள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 70% நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படுவது தான். கடந்த 2 மாதங்களாக நாடு முழுவதும் வழக்கத்துக்கு மாறாக 17% மின்சார பயன்பாடு அதிகரித்து உள்ளது. இதற்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் வருகை மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது
இதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கு அல்ல. மத்திய அரசால் நடத்தப்படும் கோல் இந்தியா நிறுவனத்திடம் இருந்து தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிலக்கரி கடந்த செப்டம்பர் மாதம் முதல் சரிபாதியாக சரிந்துள்ளது. தமிழ்நாட்டில் வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூரில் உள்ள 5 அனல் மின் நிலையங்களில் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அனல் மின்நிலையங்களுக்கு தினசரி 60,265 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து 36,255 டன் நிலக்கரி மட்டுமே தமிழ்நாட்டுக்கு கிடைத்து உள்ளது. கடந்த 8 ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் நிலக்கரி கையிருப்பு 1.92 லட்சம் டன் மட்டுமே உள்ளது. இதை வைத்து இன்னும் 2 அல்லது 3 நாட்கள் மட்டுமே தடையின்றி மின்சாரத்தை வழங்க முடியும் என கூறப்படுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் நாளொன்றுக்கு 20 மில்லியன் யூனிட் மின்சாரத்தை வாங்கி வருகிறது.
இத்தகைய சூழலில் நீர் மின் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் மின் உற்பத்தி 12 மில்லியன் யூனிட்டாக அதிகரித்து உள்ளது நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல் செய்தியாகும். ஆனால், இந்த சிக்கல்களை தீர்ப்பது யாவும் தமிழ்நாடு அரசின் கைகளில் மட்டும் இல்லை. பல்வேறு உரிமைகள் மத்திய அரசின் கீழ் சென்றுவிட்டது. தமிழ்நாட்டுக்கு தேவையான அளவு நிலக்கரியை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுத்து வருவதாக மின் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ராஜ்குமார் சிங் தெரிவிக்கையில், நிலக்கரி வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பெய்த மழையே இதற்கு காரணம் என்றும், இந்த சிக்கல் சீராவதற்கு 6 மாத காலம் ஆகும் எனவும் கூறியுள்ளார். ஓரளவு மின்கட்டமைப்பில் சீராக உள்ள மாநிலம் என்பதால் தமிழ்நாடு இன்னும் தாக்குப்பிடித்து வருகிறது. வட மாநிலங்கள் இப்போதே மின் விநியோகத்தில் தள்ளாட்டம் காண தொடங்கிவிட்டன. இத்தகைய சூழலில் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்படுமேயானால் நாடே இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.