ட்ராய் அமைப்பின் 25 ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 2030க்குள் இந்தியாவில் 6ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப் படும் என்று கூறியுள்ளார்.


இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையமான ட்ராய் அமைப்பின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இதனை தலைமேயேற்று நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, ட்ராய் அமைப்பின் அஞ்சல் தலையை வெளியிட்டார். விழாவில் உரையற்றிய பிரதமர் மோடி, "இந்திய தொலைத்தொடர்பு துறை வேகமான பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. தற்போது 3ஜி மற்றும் 4ஜி தொழில்நுட்பங்கள் இயங்கி வரும் நிலையில், அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம் ஆகவுள்ளது. அதனை தொடர்ந்து இன்னும் பத்தாண்டுகளில் 6ஜி சேவை கிடைத்துவிடும்" என்று உறுதி கூறினார்.



மேலும் பேசிய அவர், "இந்த 5ஜி தொழில்நுட்பம் மூலம் நாட்டில் 450 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பொருளாதார ஏற்றம் ஏற்படும். 5 ஜி தொழில்நுட்பமானது இணைய சேவை வேகத்தை மட்டும் அதிகரிக்காது. இது வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பையும் அதிகரிக்கும். வேளாண்மை, சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஆகிய துறைகள் இதன் மூலம் மேம்படும். அடுத்தாக 6ஜி அமல்படுத்தும் திட்டத்தை நோக்கி இந்தியா அடுத்ததாக நகர்கிறது." என்றார்.


6ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்த தனி குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர், "2030ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 6 ஜி சேவை அமலாகும். முந்தைய ஆட்சிகளில் 2ஜியை விட்டே நகர முடியாத சூழல் நிலவியது. அந்த ஆட்சியின் மோசமான கொள்கை மற்றும் ஊழலே இதற்கு காரணம். ஆனால் தற்போதைய அரசு 4ஜி, 5ஜி தொடர்ந்து 6ஜி என வேகமாக முன்னேறி செல்கிறது. இந்த மாற்றத்தை நிகழ்த்தி காட்ட ட்ராய் அமைப்பு பெரும் பங்களிப்பை மேற்கொண்டுள்ளது. சந்தையின் தேவைக்கு ஏற்ப அரசு கொள்கை முடிவுகளை மாற்றம் செய்து நடைமுறைப்படுத்துகிறது." என்று கூறினார்.



மேலும், "இதன் காரணமாக இந்திய தொலைத்தொடர்பு துறையில் அந்நிய நேரடி முதலீடு கடந்த 8 ஆண்டுகளில் 1.5 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் மொபைல் உற்பத்தி மையங்கள் 2 இல் இருந்து 200ஆக அதிகரித்துள்ளது. உலகின் மாபெரும் மொபைல் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. உலகிலேயே மலிவான மொபைல் டேட்டா கட்டணம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 5ஜி சேவை என்பது தற்சார்பு இந்தியாவின் மைல்கல்" என்று பெருமைகொண்டார் பிரதமர் மோடி.


நாட்டில் ஜியோ, ஏர்டெல், விஐ ஆகிய நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவை விரைவில் 5ஜி தொழில்நுட்பத்திற்கு தங்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளன. அதேவேளை, அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னும் 4ஜி சேவையை அமல்படுத்தவில்லை. இந்தாண்டு இறுதியில்தான் பிஎஸ்என்எல் 4ஜி சேவையையே அமல்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது.