டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தில் போலி கணக்குகளின் எண்ணிக்கை 5 சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்தால் மட்டுமே, ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை முன்னெடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
இன்று தனது ட்வீட் ஒன்றில் எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தில் இருக்கும் போலி கணக்குகளின் எண்ணிக்கை குறித்து தனக்கு தெளிவு கிடைக்காத வரை, ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை முன் நகர்த்தப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
தனது ட்விட்டர் பதிவில் இதனைக் கூறியுள்ள எலான் மஸ்க், `ட்விட்டர் நிறுவனம் கூறுவதை விட நான்கு மடங்கு அதிகமாக சுமார் 20 சதவிகிதம் வரை போலி கணக்குகள் இயங்கி வருகின்றன. இன்னும் கூடுதலாகவும் இருக்கலாம். ட்விட்டர் நிறுவனம் இதுவரை அமெரிக்க அரசின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் மேற்கொண்ட கணக்குகளின் அடிப்படையில் எனது ஆஃபர் முன்வைக்கப்பட்டது. நேற்று, ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொதுவெளியில் ட்விட்டரில் உள்ள போலி கணக்குகளின் எண்ணிக்கை 5 சதவிகிதத்திற்குக் கீழ் இருப்பதை நிரூபிக்க மறுத்துவிட்டார். அவர் அதை நிரூபிக்காத வரையில் இந்த ஒப்பந்தம் முன் நகராது’ எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று, ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பராக் அகர்வால் ட்விட்டர் தளம் எவ்வாறு செயற்கை கணக்குகளையும், போலி கணக்குகளையும் எதிர்கொண்டு வருகிறது என்பது குறித்த தரவுகள், தகவல்கள் ஆகியவற்றோடு பதிவிட்டிருந்த ட்வீட்களைக் கிண்டல் செய்து பதிவிட்டிருந்தார் எலான் மஸ்க்.
பராக் அகர்வால் முன்வைத்திருந்த விளக்கங்களை ஏற்றுக் கொள்ளாத எலான் மஸ்க் அதற்குப் பதிலளிக்கும் விதமாக பூப் எமோஜியை, அவரது விளக்கங்களை மலம் என்று குறிக்கும் விதமாகப் பதிவிட்டிருந்தார். மற்றொரு ட்விட்டர் பதிவில் எலான் மஸ்க், `தாங்கள் செலவு செய்யும் பணத்தில் தங்களுக்கு என்ன கிடைக்கிறது என்பதை விளம்பரதாரர்கள் எவ்வாறு தெரிந்து கொள்கிறார்கள்? ட்விட்டர் தளத்தின் பொருளாதார நலனுக்கு இது அடிப்படை!’ எனப் பதிவிட்டிருந்தார்.