பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர் உலக அளவில் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 7ஆம் தேதி, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்கியது. இரு தரப்பிலும் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.


குறிப்பாக, பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் செய்து வரும் செயல் உலக மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. பாலஸ்தீனிய பகுதியான காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை, 4,300 பேர் கொல்லப்பட்டனர். இதில், பெரும்பான்மையானேர் பெண்களும், குழந்தைகளும் உள்ளிட்ட அப்பாவி மக்களே ஆவர்.


அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்கும் இஸ்ரேல் போர்:


போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையிலும், இஸ்ரேல் அதை மறுத்து வருகிறது. காசாவில் உள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்து பொருள்கள், தண்ணீர், உணவு ஆகியவற்றை உலக நாடுகள் வழங்கி வருகின்றன.


எகிப்து வழியாக நேற்று முதல் காசாவுக்கு உதவிகள் அனுப்பப்பட்டு வருகிறது. எல்லைப் பகுதிகளுக்கு அருகே 200 டிரக்குகளில் 3,000 டன் உதவி பொருகள் கொண்டு சென்று நிறுத்தப்பட்டுள்ளது. 


இந்த நிலையில், காசா மக்களுக்கு தேவையான உதவி பொருள்களையும் மருத்துவ பொருள்களையும் இந்தியா அரசு இன்று அனுப்பியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, இதுகுறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், "பாலஸ்தீன மக்களுக்காக கிட்டத்தட்ட 6.5 டன் மருத்துவ உதவி மற்றும் 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் C-17 விமானம் எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு புறப்பட்டது.


காசா மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா:


அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சைக்கு தேவையான பொருட்கள், கூடாரங்கள், தூங்கும் பைகள், தார்ப்பாய்கள், சுகாதாரப் பொருட்கள், தண்ணீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் போன்ற பிற தேவையான பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளார்.


கடந்த 19ஆம் தேதி, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசியிருந்தார். காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை தொடர்ந்து வழங்குவதாக உறுதி அளித்தார்.


காசா பகுதியில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதாகவும் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையில் இந்தியாவின் நீண்டகால கொள்கை நிலைப்பாடான இருநாட்டு கொள்கையில் உறுதியுடன் இருப்பதாக பாலஸ்தீன அதிபரிடம் பிரதமர் மோடி கூறினார்.


இதையும் படிக்க: சாக்லெட், பிஸ்கட்களை கொடுத்து ஹமாஸ் அமைப்பினரை ஏமாற்றிய மூதாட்டி.. பணயக்கைதி ஹீரோவானது எப்படி?