கடந்த 2020ம் ஆண்டு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 31 குழந்தைகள் தற்கொலை செய்துக் கொண்டதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று குழந்தைகளுக்கு உளவியல் பிரச்சினைகளை பெருமளவில் உயர்த்தியிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி கடந்த 2020ஆம் ஆண்டு 18 வயதுக்குக் குறைவான 11,396 குழந்தைகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். 2019 மற்றும் 2018ஆம் ஆண்டுகளை ஒப்பிடும்போது இது அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டு தற்கொலை செய்துக் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை 9,613 ஆக இருந்த நிலையில் தற்போது 18% உயர்ந்துள்ளது. அதேபோல 2018ஆம் ஆண்டு தற்கொலை செய்துக் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை 9,413 ஆக இருந்த நிலையில் தற்போது 21% உயர்ந்துள்ளது.




இவற்றின்படி குடும்ப பிரச்சினைகளால் 4006 பேரும், காதல் பிரச்சினைகளின் காரணமாக 1337 பேரும் உடல்நலக்குறைவால் 1327 குழந்தைகளும் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. வேலையின்மை, போதைப் பொருள் பயன்பாடு போன்றவை தற்கொலைக்கான மற்ற காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


 இது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு, சேவ் தி சில்ட்ரன், துணை இயக்குநர் பிரபாத் குமார் கூறுகையில், கோவிட்-19 மற்றும் அதன் விளைவாக பள்ளி மூடல்கள் மற்றும் சமூக தனிமைப்படுத்தல் மற்றும் பெரியவர்களிடையே பதட்டம் ஆகியவை குழந்தைகளின் மனநலப் பிரச்சினையை மேலும் மோசமாக்கியதாக தெரிவித்தார். குழந்தைகளிடையே அதிகரிக்கும் தற்கொலை அமைப்பு ரீதியான தோல்வியைத்தான் காட்டுகிறது. உடல் பிரச்சினைகளைப் போலவே உளவியல் பிரச்சினைகளைத் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். குழந்தைகள் தங்கள் திறன்களை வளர்த்தெடுக்கவும், பிரகாசமான எதிர்காலத்திற்கான கனவுகளை நிறைவேற்றுவதற்கும் எதிர்நோக்கும் ஒரு சாதகமான சுற்றுச்சூழல் அமைப்பை வழங்குவது பெற்றோர்கள், குடும்பங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் அரசாங்கத்தின் கூட்டுப் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.


"என்சிஆர்பி தரவுகளின்படி 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 11,396 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் 5,392 பேர் சிறுவர்கள் மற்றும் 6,004 பேர் பெண்கள். இதன்படி ஒரு நாளைக்கு 31 இறப்புகள் அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒரு குழந்தை தற்கொலை செய்து கொள்வதையே காட்டுகிறது. 




இதுதொடர்பாக பேசிய குழந்தைகள் உரிமை ஆர்வலர், ப்ரீத்தி மஹாரா, "பெரும்பாலான குழந்தைகள், குறிப்பாக வறுமையின் நிழலில் வாழ்பவர்கள், ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதில் சிரமப்பட்டனர் மற்றும் டிஜிட்டல் பிளவுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டனர், அதே நேரத்தில் பலர் இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் அதிகப்படியான பயன்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அது தொடர்புடைய சைபர் குற்றங்களும் அதிகரித்ததாக தெரிவித்தார்.


இது தொடர்பாக குழந்தைகளிடம் பிரச்சினைகளை கண்டறிவதில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கவனத்துடன் இருக்க வேண்டும், கல்வி நிறுவனங்களிலும் கவுன்சிலிங் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 


உங்களுக்கு மன அழுத்தமோ, தற்கொலை எண்ணமோ இருந்தால் உடனே அழைக்க வேண்டிய உதவி எண்கள்:


சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் – 044 -2464000 (24 மணிநேரம்)


மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் - 104 (24 மணிநேரம்)


iCall Pychosocial ஹெல்ப்லைன் - 022-25521111 (திங்கள் - சனி, காலை 8 மணி - இரவு 10 மணி)