நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வரலாற்றில் முதன்முறையாக 750 பில்லியன் அமெரிக்க டாலர் (US$ 750 Billion) மதிப்பை கடந்துள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை  அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.


சர்வதேச அளவில் நிலவிய சவாலான பொருளாதார சூழலிலும் இந்தியாவின் ஏற்றுமதி 750 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகமாக பதிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


நாடு சுதந்திரமடைந்து 75-வது ஆண்டு‘அம்ரித்க் மோட்சவ்’ கொண்டாட்டத்தின்போது, இந்த சாதனையை நாடு எட்டியுள்ளதாக அமைச்சர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.  


இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் ( The Associated Chambers of Commerce and Industry of India - (ASSOCHAM) வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பியூஷ் கோயல், கடந்த 9 ஆண்டுகளாக எவ்வித தடங்கலும் இல்லாத, நிகரான பொருளாதார வளர்ச்சிகான தேவையான திட்டங்கள் செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். வர்த்தகம் மற்றும் சேவை ஆகிய துறை ஆரோக்கியமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 2020- 2021 ஆம் ஆண்டின் 500 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி, இந்தாண்டு 750 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது. 


இந்தியாவின் போட்டித் தன்மையை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் முக்கிய உரையில், வர்த்தகப் பொருட்கள் மற்றும் சேவைத் துறைகளில் ஆரோக்கியமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் பணவீக்கம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது;வட்டி விகிதங்கள் அதிகரித்து வருகின்றன; உலகின் பிற நாடுகளில் வளர்ச்சியை ஒப்பிடுகையில், இந்தியாவின் செயல்திறன் வளர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டு பேசினார். 2047- இல் நாட்டின் சுதந்திரத்தின் நூற்றாண்டை கொண்டாடுவதற்காக பிரதமர் மோடி கூறிய ஐந்து உறுமொழிகளை பின்பற்றி நாட்டை வளர்ச்சிப் பாதையில் பயணிக்க செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 


“பாரத் @100: அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான உலகளாவிய வளர்ச்சிக்கு வழி வகுத்தல்” என்ற நிகழ்வின் கருப்பொருள், நாட்டின் இளைஞர்கள் மற்றும் வளர்ந்து வரும் இளம் பாரதம் என்று அமைச்சர் கூறினார். உலகளாவிய சவால்களை சந்திப்பதிலும், உலகை வழிநடத்தும் பொருளாதார வல்லரசாக இந்தியாவை பார்க்க மக்கள் விரும்புவதாகவும்,  உலகமும் இந்தியாவை பல விசயங்களில் தலைமைத்துவ பண்புடன் பார்ப்பதாக அவர் பேசினார்.


நாட்டு மக்களின், குடும்பங்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதில் அரசின் கவனம் உள்ளதாகவும், நாட்டில் இளைஞர்கள் அதிகம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.


உள்நாட்டுச் சந்தை சீராக வளர்ச்சியடைந்து வருவதாகவும், கடந்த 9 வருடங்களாக அரசு பொருளாதாரம்  தடையற்ற மற்றும் நிலையான வளர்ச்சியைப் பெறுவதற்குத் தேவையான அடித்தளங்களை அமைப்பதில் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். வளரும் நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான பயணத்தின் முதல் தசாப்தமானது, உள்நாட்டு மற்றும் சர்வதேச மூலதனத்தை ஈர்ப்பதற்காக வலுவான அடிப்படைகள், பொருளாதார கட்டமைப்பு மற்றும் நிலையான ஒழுங்குமுறை நடைமுறைகளை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.


உலக அளவில் இந்தியாவை நிலைநிறுத்துவதற்கு ஜி-20 தலைவர் பதவி ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியுள்ளது என்றும், உலகெங்கிலும் இந்தியாவின் வணிகத்தை வெளிக்கொணர தொழில்துறையினர் மற்றும் வணிகர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.