கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ தேவி கோயிலில் சமயவிளக்கு (Chamayavilakku) திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இத்திருவிழாவில் ஆண்கள், பெண் வேடமிட்டு பங்கேற்பர். இத்திவிழாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.
பெண் வேடமிடும் ஆண்கள்:
நாட்டில் தனித்துவமாக நடைபெறும் திருவிழாக்களில் ஒன்று கோட்டங்குலங்கரா தேவி (Kottankulangara Devi Temple) கோயில் திருவிழா. கொல்லம் பகுதியில் அமைந்துள்ள இந்த கோயிலின் தெய்வம் பகவதி தேவி. இங்கு சுயம்புவாக தோன்றியதாக கூறப்படுகிறது. ஆண்கள், பெண் வேடமிட்டு பகவதி தேவி அம்மனை வழிபடுவது வழக்கமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழாவில் ஆண்கள் அனைவரும் பெண்கள் போல் வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த ஆண்டு கொல்லம் மாவட்டத்தில் இந்தத் திருவிழா ஏராளமான மக்கள் பங்கேற்க வெகு விமரிசையாக நடந்துள்ளது. இந்தாண்டும் அதே உற்சாகத்துடன் நடைபெற்றுள்ளது. பெண் வேடமிட்டு ஆண்கள் பகவதி தேவியை வழிபடுவதால் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
தீபம் ஏந்தி வழிபாடு:
ஆண்கள், பெண் வேடமிட்டு பாரம்பரிய விளக்குகளை ஏந்தி தேவியை வழிபடுவர். அதோடு பூக்களோடு சிறப்பு பூஜையும் செய்வர். ஆரம்ப காலத்தில் மூங்கிலால் கூரை கொண்டிருந்த இந்தக் கோயில், பின்னர் பெரிதாக கட்டப்பட்டுள்ளது. அதோடு, பெண்கள் மட்டுமே வழிப்பட்டுவந்த முறை மாறி ஆண்களும் பெண் வேடமிட்டு வழிப்பாடு செய்ய தொடங்கியுள்ளனர். அதிலிருந்து ஒவ்வோரு ஆண்டும் இத்திருவிழாவில் பங்கேற்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஆண்களுக்கு ஒப்பனை செய்ய கோயில் வாசலிலேயே ஒப்பனை கலைஞர்கள் இருப்பார்கள். ஆண்கள் தயாரானதும், ஆண்கள் கைகளில் சமயவிளக்கை ஏந்தி மலர்களுடன் தேவியை வழிப்பட செல்வர். விளக்கில் 5 திரிகள் இட்டு தீபம் ஏற்றுகின்றனர். விளக்கு, மலர்களோடு ஊர்வலமாகச் செல்கின்றனர். இவ்வாறாக பெண் போல் வேடமிட்டு விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்துவது வேலையிலும், தொழிலிலும் வளத்தைச் சேர்க்கும் என நம்புகின்றனர். இது தான் இத்திருவிழாவில் சிறப்பு.
சமயவிளக்கு திருவிழா வராலாறு :
பழங்காலத்தில் இப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சில மாடு மேய்க்கும் சிறுவர்கள் ஒரு கல்லில் தேங்காயை உடைத்துள்ளனர். அந்தக் கல்லில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்துள்ளது. பயந்து போய் ஊர்க்காரர்களிடம் அவர்கள் சொல்ல ஊரார் உள்ளூர் ஜோசியரை அணுகியுள்ளனர். அவரோ அந்தக் கல் வனதுர்கா என்றும் அதற்கு பூஜைகள் செய்து கோயில் எழுப்பி வணங்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.
அதன்பிறகு அங்கு கோயில் எழுப்பப்பட்டது. ஆரம்பத்தில் நான்கு மூங்கில் கம்பு, இலைகளைக் கொண்டு கூரை வேய்ந்து கோயில் கட்டினர். பின்னர் அது பெரிய கோயில் ஆகியுள்ளது. ஆரம்பத்தில் பெண் பிள்ளைகள் மட்டுமே அங்கே பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்போது முதன் முதலில் வனதுர்கா கல்லைக் கண்டறிந்த மாடு மேய்க்கும் சிறுவர்கள் தாங்கள் பெண் போல் வேடமணிந்து அந்தக் கோயிலுக்குச் சென்று வந்துள்ளனர். இப்படித்தான் இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் சமயவிளக்குப் பூஜை நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தாண்டும் ஏராளமானோர் பங்கேற்றுள்ள திருவிழாவின் புகைப்படங்கள், வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.