பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ள நிலையில், அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டடம்
புதிய கட்டிடம் இன்று (மே 28) திறக்கப்பட உள்ள நிலையில், திறப்பு விழாவுக்கு முன்னதாக, புதிய கட்டிடத்தின் காட்சிகள் அடங்கிய வீடியோவை ட்விட்டரில் ஷாருக் கான் பகிர்ந்தார். மேலும் அந்த வீடியோவில் புதிய நாடாளுமன்ற கட்டடம் முழுவதும் காண்பிக்கப்பட, பின்னணியில் ஷாரூக்கான் குரலில் நாடாளுமன்றத்தை குறித்து கவிதையாக விவரிக்கும்படி உருவாகியுள்ளது. அவர் புதிய கட்டடம் பற்றி பேசுகையில், வீடியோ பின்னணியில் மெதுவாக ஒரு இந்தி பாடலும் ஓடுகிறது.
ஷாரூக் பதிவு
வீடியோவைப் பகிர்ந்த ஷாரூக்கான் தனது ட்வீட்டில், “நமது அரசியலமைப்பை நிலைநிறுத்தும் மக்களுக்காக, அற்புதமான ஒரு புதிய வீடு. இது இந்த மகத்தான தேசத்தின் ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதோடு இந்திய மக்களின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கிறது @நரேந்திரமோடி ஜி. இந்தியாவுக்கு மகிமை என்ற பழைய கனவுடன் உருவாகியுள்ளது இந்த புதிய இந்தியாவுக்கான புதிய நாடாளுமன்றக் கட்டிடம். ஜெய் ஹிந்த்! #MyParliamentMyPride," என்று எழுதியுள்ளார்.
பிரதமர் மோடி பதில்
தற்போது வைரலாகும் இந்த பதிவுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, “அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது! புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஜனநாயக வலிமை மற்றும் முன்னேற்றத்தின் சின்னமாகும். இது பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தை இணைக்கிறது. #MyParliamentMyPride." என்று கூறியுள்ளார்.
அக்ஷய் குமார் பதிவு
ஷாருக் தவிர, அக்ஷய் குமாரும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் குறித்து தனது எண்ணங்களை வெளிப்படுத்தினார். “நாடாளுமன்றத்தின் இந்த புகழ்பெற்ற புதிய கட்டிடத்தைக் கண்டு பெருமை அடைகிறேன். இது என்றென்றும் இந்தியாவின் வளர்ச்சிக் கதையின் சின்னமாக இருக்கட்டும்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார். அதற்குப் பிரதமர், "உங்கள் எண்ணங்களை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். நமது புதிய நாடாளுமன்றம் உண்மையிலேயே நமது ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கமாகும். இது நாட்டின் வளமான பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. எதிர்காலத்திற்கான துடிப்பான அபிலாஷைகள்." என்று பதிலளித்தார்.
ரஜினி ட்வீட்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் குறித்து ட்வீட் செய்துள்ளார். "இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல். #தமிழன்டா, தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் @narendramodi அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.” என்று ரஜினிகாந்த் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
புதிய கட்டடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார், மேலும் லோக்சபா சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் வரலாற்று ‘செங்கோல்’ நிறுவப்பட்டது