மாதவிடாய் சுகாதார நாள் ஒவ்வொரு ஆண்டும் மே 28 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.  மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவதில் காட்டப்படும் தயக்கத்தைத் தகர்ப்பதும், உலக முழுவதுமான பெண்கள் மற்றும் பதின்மச் சிறுமியரின் மாதவிடாய் சுகாதாரத்தைப் பேணுவதற்கும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் காலம் மிக முக்கியமானது. சுமார் 11 அல்லது 12 வயதில் பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் காலம் தொடங்கும். மாதவிடாய் காலத்தில் பலருக்கும் பலவிதமான அசௌகரியங்கள் இருக்கும். ஒரு சில பெண்களுக்கு கடும் வயிற்றுவலி, முதுகு வலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படும்.


இதுபோன்ற இன்னல்கள் இருந்தாலும் மாதவிடாய் சுகாதாரம் என்பது மிகவும் முக்கியம். மாதவிடாய் சுகாதாரம் குறித்து ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருக்க வேண்டும். ரத்த உதிரிப்போக்கு ஏற்படும் பெண் உறுப்பை எப்போதுமே சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் கிருமி தொற்று ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவிற்கு கொடிய தொற்றாக மாறும் அபாயம் ஏற்படும். இந்த மாதவிடாய் சுகாதார தினத்தில் சில முக்கியமான குறிப்புகளை பற்றி பார்க்கலாம்.



  • மாதவிடாய் சுகாதார தினம் 2013 இல் வாஷ் யுனைடெட் - ஜெர்மன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. முதல் மாதவிடாய் சுகாதார தினம் 2014 இல் கொண்டாடப்பட்டது.

  • சமூகத்தின் மூடநம்பிக்கை மற்றும் போதிய விழிப்புணர்வுகள் இல்லாத காரணத்தால் பல வளரும் நாடுகளில் இளம் பெண்கள் மத்தியில் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய அறியாமை இருந்து வருகிறது.

  • பல சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு சுத்தமான நீர் மற்றும் சானிட்டரி நாப்கின் கிடைக்காததால் அவர்களின் அடிப்படை கல்வி பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளியில் இருந்து பலரும் பாதியில் நிற்கும் நிலை ஏற்படுகிறது.

  • அருணாசலம் முருகானந்தம், இந்தியாவில் பெண்களுக்கான மலிவான சானிட்டரி பேட்களை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார்.

  • மாதவிடாய் சுகாதார தினம், லாப நோக்கம் அற்ற நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், தனிநபர்கள், தனியார் துறை மற்றும் ஊடகங்களை ஒரு குடையின் கீழ் ஈடுபடுத்துவதன் மூலம் உலக அளவில் முறையான மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துகிறது.

  • மாதவிடாய் சுகாதார தினம் என்பது மாதவிடாய் சுற்றி இருக்கும் சவாலான விஷயங்கள மற்றும் மூடநம்பிக்கையை உடைத்து நல்ல மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்த உதவுகிறது.  

  • மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்த தேசிய அளவிலான நடவடிக்கையை உறுதி செய்வதில் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்துமாறு இந்த தினத்தில் வலியுறுத்தப்படுகிறது.  

  • 2030 ஆம் ஆண்டில், உலகெங்கிலும் உள்ள பெண்கள் மாதவிடாய் சுகாதாரத்தைப் பற்றி அறிந்துகொள்வதை மாதவிடாய் சுகாதார தினம் உறுதிசெய்கிறது.

  • பள்ளிகளில் பயிலும் பெண்களுக்கு சுத்தமான நீர் மற்றும் சானிட்டரி பேட் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.