India Space Station: சந்திரயான்-4 பயணம், வெள்ளிக் கோள் சுற்றுவட்டப்பாதை, முதல் லட்சியத் திட்டமான தேசிய விண்வெளி நிலையம் வரை விண்வெளித் திட்டத்தை கணிசமான அளவுக்கு மத்திய அரசு விரிவுபடுத்த உள்ளது. இந்தத்  திட்டங்கள், இந்தியாவின் தொழில்நுட்பத் திறன்களை விரிவுபடுத்துதல், தொழில் துறை ஒத்துழைப்பை அதிகரித்தல், உலகளாவிய  விண்வெளி ஆய்வில் நாட்டின் இடத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டவையாக பார்க்கப்படுகிறது


சந்திரயான் -4 பயணம்:


நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய பின், பூமிக்கு திரும்புவதற்கு தேவையான முக்கிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதையும், செயல்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது சந்திரயான்-4 பயணம். மேலும் நிலவில்  இருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்வதற்காக, அவற்றை பூமிக்கு கொண்டுவருவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.  2040-ம் ஆண்டிற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பயணத்திற்கான , இந்தியாவின் முக்கியமான பயணமாகவும் சந்திரயான்-4 இருக்கும்.


இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால், நிர்வகிக்கப்படும் இந்தப் பயணம், தொழில்துறை, கல்விப் புல வலுவான பங்கேற்புடன், ஒப்புதல் அளிக்கப்பட்டதிலிருந்து 36 மாதங்களுக்குள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அனைத்து முக்கிய  தொழில்நுட்பங்களும் உள்நாட்டிலேயே உருவாக்கப்படுவதால், அதிகபட்ச வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன், மற்ற துறைகளுக்கான  தொழில்நுட்ப சுழற்சியையும் அளிக்கும். இந்தத் திட்டத்திற்கு மொத்தம் ரூ.2,104.06 கோடி தேவைப்படுகிறது.  விண்கல உருவாக்கம், எல்எம்வி 3-ன் இரண்டு செலுத்து வாகனங்கள் போன்றவற்றின் செலவும் இதில் அடங்கும்.




வெள்ளிக் கோள் சுற்றுவட்டப்பாதை பயணம்:


வெள்ளிக் கோள் சுற்றுவட்டப்பாதை பயணம் என்ற லட்சியத் திட்டம், சந்திரன் மற்றும் செவ்வாய் ஆய்வு முயற்சிகளுக்கு அப்பால், கோள்கள் சம்பந்தப்பட்ட இந்தியாவின் ஆய்வுகளை நோக்கிய மிகப்பெரிய முன்னெடுப்பைக் குறிக்கிறது. இந்தப் பயணம், 2028 மார்ச் மாதத்தில் தொடங்கும் என்று எதிரபார்க்கப்படுகிறது.  இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.1236 கோடியாகும்.  இதில் ரூ.824 கோடி விண்கலன் உருவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


தேசிய விண்வெளி நிலையம்:


தேசிய விண்வெளி நிலையத்தின் முதலாவது தொகுப்பு கட்டுமானம் என்பது  ககன்யான் திட்டத்தின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் குறிக்கிறது. 2035-ம் ஆண்டுக்குள் தேசிய விண்வெளி நிலையத்தை நிறுவி செயல்படுத்துவதையும் 2040-க்குள் நிலவுக்கு இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பி வைப்பதையும்  உள்ளடக்கியதாக இருக்கும்.  தேசிய விண்வெளி நிலையத்தின் முதலாவது அலகினை விண்ணில் செலுத்துவது உட்பட, 8 பயணங்களை கொண்ட இந்தத் திட்டம், 2028-வாக்கில்  நிறைவடையும்.


புதிதாக ஒப்புதல் அளிக்கப்பட்ட ரூ.11,170 கோடி கூடுதல் தொகையுடன் ககன்யான் திட்டத்திற்கு திருத்தியமைக்கப்பட்ட  நிதிஒதுக்கீடு ரூ.20,193 கோடியாகும்.