தெலங்கானாவில் ஊர் நிகழ்ச்சிகளில் தலித் இளைஞர்கள் பறை இசைக்க மறுத்த காரணத்தால் அவர்களின் குடும்பத்தை கிராமத்தினர் ஒதுக்கி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய கொடூரங்கள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, தலித் பெண்கள், சிறுவர்கள், சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


படித்த இளைஞர்களை பறை இசைக்க சொல்லி கட்டாயப்படுத்திய கிராமத்தினர்: 


இந்த நிலையில், தெலங்கானாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மேதக் மாவட்டத்தில் ஊர் நிகழ்ச்சிகளில் பறை இசைக்க மறுத்த காரணத்தால் தலித் குடும்பத்தை கிராமத்தினர் ஒதுக்கி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 16 பேரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


மதிகா சமூகத்தைச் சேர்ந்த (பட்டியலின சாதி) இளைஞர்களை கிராமத்தில் நடக்கும் இறுதிச் சடங்குகளின் போது 'தப்பாட்டம்' இசைக்க மறுத்ததால், சில கிராமவாசிகளால் ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது.


முதுகலைப் பட்டம் பெற்றுவிட்டு, ஹைதராபாத்தில் பணிபுரியும் தலித் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை, விழாக்களில் இசைக்கருவியை இசைக்குமாறு சில கிராமவாசிகள், அவர்களது சொந்த சமூகத்தைச் சேர்ந்த சிலர் உள்பட வற்புறுத்தினார்கள். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர்.


தெலங்கானாவில் ஷாக்:


அதோடு, அந்த தலித் குடும்பத்தினர் வீடு கட்டுவதற்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கும் அனுமதி வழங்கவில்லை என பஞ்சாயத்துத்துணை தலைவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி, கிராம மக்கள் சிலர் கூட்டத்தை நடத்தி, பாரம்பரிய தொழிலைத் தொடர இளைஞர்கள் மறுத்ததால் அவர்களின் குடும்பத்தை ஊரில் இருந்து ஒதுக்கி வைக்க தீர்மானம் நிறைவேற்றினர். இதை மீறுபவர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.


இதையடுத்து, அந்த இளைஞர்கள் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 12ஆம் தேதியன்று பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


இந்த சம்பவம் தொடர்பாக, இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தப்பியோடிய 15 பேரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் தலித் இளைஞர்கள் வழக்கு தொடர்ந்தனர். தலித் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.