ஏர்பஸ் (Airbus) மற்றும் டாடா (Tata) நிறுவனங்கள் இணைந்து குஜராத் மாநிலத்தில் விமான உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க உள்ளது. இதன் மூலம் இந்திய இராணுவத்திற்கு தேவையான சரக்கு விமானங்கள் (C295 transport plane) தயாரிக்கப்பட உள்ளன.
இந்திய விமானப் படை 748 சரக்கு விமானங்களைப் பயன்படுத்தி வருகிறது. தற்போதைக்கு தேவைப்படும் விமானங்கள் புதிதாக தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்திய விமானப் படைக்குப் புதிய சரக்கு விமானங்களை வாங்குவதற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஏா்பஸ் பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனத்துடன் ரூ.21,935 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கையெழுத்திடப்பட்டது.
ஒப்பந்தத்தின் படி, சி-295 ரக 16 சரக்கு விமானங்கள் ஸ்பெயினில் தயாரிக்கப்பட்டு நல்ல செயல்ப்படும் நிலையில் ஏா்பஸ் நிறுவனம் இந்தியாவுக்கு வழங்கவுள்ளது. 4 ஆண்டுகளுக்குள் 16 விமானங்கள் இந்தியா வந்து சேரும்.
அனுமதி அளிக்கப்பட்ட 56 (C-295 MW) விமானங்களில் 40 சரக்கு விமானங்களை டாடா நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டிலேயே ஏா்பஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. சி295 சரக்கு விமானங்களை தயாரிப்பதற்கான தர நிா்ணய ஒப்புதலை ஏா்பஸ் நிறுவனத்துக்கு விமான தர ஒழுங்குமுறை இயக்குநரகம் (Directorate General Of Aeronautical Quality Assurance -(DGAQA) ) வழங்கியது.
சமீபத்தில் குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சியின்போது இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், அம்மாநிலத்தில் விரைவில் விமானங்கள் தயாரிக்கப்படும் நிலையங்கள் அமைய உள்ளதாகவும், விமான உதிரி பாகங்கள் ராஜ்கோட்டில் தயாரிக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
’தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் முதன் முறையா இந்திய இராணுத்திற்கு தேவையான விமானங்களை தனியார் நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
C-295 விமானங்களின் சிறப்புகள்:
சி-295 ரக விமான குறைந்த எடையுடன் மத்திய ரக அளவில் தயாரிக்கப்பட உள்ளது. இது ஒரு tactical airlifter. அதாவது இராணுவ வீரர்களுக்கு முக்கியமான நேரங்களில் தேவைப்படுபவைகளை இதன் மூலம் எடுத்துச் செல்லல்லாம்.
இதன் சிறப்புகளில் முக்கியமானது என்னவென்றால், இதன் மூலம் பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தலாம். அதாவது, இதில் இராணுவ வீரர்களும் பயணிக்கலாம், இராணுவத்திற்கு தேவையான பொருட்களை எடுத்துச்செல்லவும் பயன்படுத்தலாம்.
சி-295 ரக விமானங்கள் உலக அளவில் எல்லா காலநிலையிலும் சிறப்பாக செயல்படும் திறன் கொண்டதாக இருக்கும்.
இந்த விமானம் தர நிர்ணய சான்றிதழ் பெற்றது. இரவும் பகலும் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் திறன் கொண்டது. பாலைவன பகுதிகள் உள்ளிட்ட வெவ்வேறு காலநிலை உள்ள இடங்களிலும் சி-295 ரக விமாங்களை இயக்க முடியும் என்று ஏர்பஸ் நிறுவனத்தின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
C295W ரக விமானம் அதிகப்படியான எடையை தாங்கும் திறன் கொண்டிருக்கும். அதிக எடையுடன் வெகு தொலைவிற்கு பயணிக்கும். இந்த புதிய ரக விமாங்கள் மூலம் 4-சதவீதம் எரிபொருள் சேமிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் பயணிக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உருவாக்கப்பட உள்ளது. ஏர்பஸ் நிறுவங்களுக்கு இதுவரை 285 ஆர்டர்கள் வந்துள்ளதாகவும், அதில் 203 விமானங்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 201 விமானங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இராணுவ துறையில் சி-295 ரக விமானங்கள் அதிக வெப்பநிலை உள்ள இடங்களிலும், குளிர் பிரதேசங்களிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளன. பிரேசிலின் காடுகள், கொலம்பியாவின் மலைப் பகுதிகள், அல்ஜீரியா முதல் ஜோர்டான் வரை உள்ள பாலைவன பகுதிகள், போலந்து மற்றும் ஃபின்லாந்து ஆகிய பனி பிரதேசங்கள் என எல்லா காலநிலையிலும் இந்த விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாகம், அதன் சிறப்பான செயல்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விமானத்தில் ஒரே சமயத்தில் 71 படைக்குழுக்களை மற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்ல முடியும். தற்போதைய பயன்படுத்தப்படும் சரக்கு விமானங்களால் அடைய முடியாத இடங்களைக் கூட சி-295 ரக விமானங்களால் சென்றடைய முடியும். அவைகளால் சாத்தியப்படாதவற்றையும் சி-295 ரக விமானம் செயல்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போா் சமயங்களில் காயமடையும் வீரா்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும், பேரிடா் மீட்பு நடவடிக்கைகளிலும் சி-295 சரக்கு விமானங்களைப் பயன்படுத்த முடியும் வகையில் தயாரிக்கப்பட உள்ளது. ’civilian version’- ரக விமானங்களும் சி-295 பிரிவின் கீழ் தயாரிக்கப்பட உள்ளது.
அடிக்கல் நாட்டு விழா:
குஜராத்தில் உள்ள வடோதராவில் வரும் 30 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி விமான தயாரிக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த விமானங்களும் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.