இந்தியாவில் தற்பொழுது உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதிவேக வந்தே பாரத் ரயில் தமிழகத்தில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிறுவனம், இந்துஸ்தான் அலுமினியம் கார்ப்பரேஷன், பாரத் எலக்ட்ரிக் இரும்பு நிறுவனம் ஆகியவை இணைந்து எடை குறைந்த அலுமினிய சரக்கு ரயில் பெட்டியை தயாரித்து உள்ளன.
இந்த ரயில் பெட்டிகள் திறந்த நிலையில் உள்ள ரயில் பெட்டிகளாகும். இதில் நிலக்கரி, சரளை கற்கள், இரும்பு தளவாட பொருட்கள் போன்றவற்றை அனுப்ப முடியும். இந்த ரயில் பெட்டிகள் பற்றவைப்பு இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பெட்டி தற்போது பயன்பாட்டில் உள்ள ரயில் பெட்டியை விட 3.25 டன் எடை குறைவானதாகும். மேலும் தற்போதைய ரயில் பெட்டிகளை காட்டிலும் 180 டன் அதிகமாக சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும். எடை குறைவாக இருப்பதால் காலி பெட்டிகள் திரும்பி செல்லும் போது எரிபொருள் நுகர்வு குறைவாக இருக்கும். இதன் மூலம் ஒரு ரயில் பெட்டி தொடர் 14,500 டன்கள் கரியமல வாயு வெளியேற்றத்தை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும்.
இந்த ரயில் பெட்டிகளை 80 சதவீதம் மறு விற்பனைக்கு உட்படுத்தலாம். துரு பிடிக்காது என்பதால் பராமரிப்பு செலவு குறைவு. தற்போதைய இரும்பு சரக்கு பெட்டிகள் தயாரிக்க நிக்கல், காட்மியம் போன்ற மூலப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டி இருக்கிறது. இந்த புதிய முயற்சி இறக்குமதியை குறைத்து அன்னிய செலவாணியை சேமிக்கிறது.
மேலும் உள்ளூர் அலுமினிய தொழிற்சாலைகள் வளர்ச்சி பெறும். பல சிறப்புகள் பெற்ற இந்த சரக்கு ரயில் பெட்டிகள் தொடர் நேற்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வரர் ரயில் நிலையத்திலிருந்து சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூருக்கு அனுப்பப்பட்டது. இந்த புதிய அலுமினியம் ரயில் பெட்டி சேவையை புவனேஸ்வரில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் துவக்கி வைத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்