2022ம் ஆண்டுக்கான உலக பட்டினி குறியீட்டில் (GHI) இந்தியா 107 வது இடத்திற்கு சரிந்துள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளத்தை ஒப்பிடுகையில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. 121 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 107 வது இடத்தை பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 2021ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா 101ஆவது இடத்தை பிடித்திருந்தது. சீனா, துருக்கி மற்றும் குவைத் உள்பட பதினேழு நாடுகள் இந்த பட்டியலில் முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டன என பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டைக் கண்காணிக்கும் உலகளாவிய பட்டினி குறியீட்டின் இணையதளம் இன்று தெரிவித்துள்ளது.


முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம், பட்டினி அறிக்கையை மேற்கோள் காட்டி, 2014ஆம் ஆண்டு முதல் மோடி தலைமையிலான அரசின் 8 ஆண்டுகளில் இந்தியாவின் மதிப்பெண் மோசமாகிவிட்டதாக விமர்சித்துள்ளார். 


 






இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "மாண்புமிகு பிரதமர் எப்போது ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினி, வளர்ச்சி குன்றிய நிலை மற்றும் குழந்தைகளின் மத்தியில் நிகழும் வீண்விரயம் போன்ற உண்மையான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பார்? " என கேள்வி எழுப்பியுள்ளார். 


அயர்லாந்து தொண்டு நிறுவனமான கன்சர்ன் வேர்ல்டுவைடு, ஜெர்மன் அமைப்பான வெல்ட் ஹங்கர் ஹில்ஃப் ஆகியவை இணைந்து இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது. அறிக்கையில், இந்தியாவின் பட்டினி நிலை தீவிரமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


2021 ஆம் ஆண்டில், 116 நாடுகளில் இந்தியா 101ஆவது இடத்தில் இருந்தது. இந்தாண்டு, 121 நாடுகள் கொண்ட பட்டியலில் 107 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் பட்டினி குறீயிட்டு மதிபெண்களும் குறைந்து வருகிறது. 2000ஆம் ஆண்டு, 38.8 ஆக இருந்த மதிப்பெண்கள் 2014 மற்றும் 2022 இடையேயான காலத்தில் 28.2 - 29.1 மதிப்பெண்களாக குறைந்தன.


உலகளவிலும் பிராந்திய அளவிலும் தேசிய அளவிலும் பட்டினி குறித்து ஆய்வு மேற்கொண்டு அதன் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு உலக பட்டினி குறியீடு உதவுகிறது. பட்டினி எந்தளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது? எந்தளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது? என்பதை அடிப்படையாக கொண்டு உலக பட்டினி குறியீட்டுக்கான மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. பட்டினி எங்கு அதிகமாக உள்ளது என்பதை அறிந்து கொண்டு அங்கு அதைக் குறைக்க முயற்சி மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த பட்டியல் உதவுகிறது.


135 நாடுகளில் உள்ள தரவுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 116 நாடுகளிலிருந்து மட்டுமே தரவுகள் முழுமையாகக் கிடைத்தன. இதன் காரணமாக, 116 நாடுகள் கொண்ட பட்டியலே தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு, 107 நாடுகளின் தரவுகள் எடுத்துக்கொள்ளப்பட்டு மதிப்பிடப்பட்டன.