ரொட்டி, சப்பாத்தியை காட்டிலும் பேக் செய்யப்பட்ட பரோட்டாவை அதிகம் விரும்புக்கூடிய நபரா நீங்கள்? அப்படியிருந்தால், நீங்கள் இனி அதிக பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். சப்பாத்திக்கு 5 விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) வதிக்கப்பட்டு வரும் நிலையில், இனி, பேக் செய்யப்பட்ட பரோட்டாவுக்கு 18 விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட உள்ளது.
பரோட்டாவும் சப்பாத்தியும் அதிகம் விரும்பக்கூடிய உணவாக இருக்கிறது. இந்நிலையில், இரண்டும் ஏன் தனித்தனி வரி வரம்பிற்குள் வருகிறது? என்பது குறித்து குஜராத் மேல்முறையீட்டு ஆணையத்தின் (GAAAR) தீர்ப்பு தெளிவுப்படுத்துகிறது.
பல்வேறு வகையான பரோட்டாக்களை தயாரிப்பது தொடர்பான விவகாரத்தில் மேம்பட்ட தீர்ப்புக்கான அதிகார அமைப்பு (ஏஏஆர்) வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அகமதாபாத்தை தளமாகக் கொண்ட வாடிலால் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மேல்முறையீடு செய்தது. இதற்கான தீர்ப்பு, செப்டம்பர் 15ஆம் தேதி வழங்கப்பட்டது.
கலப்பு காய்கறிகள், மலபார் மற்றும் பிளைன் உள்பட மொத்தம் எட்டு வகையான பரோட்டகளை தயார் செய்வதாக அந்நிறுவனம் அதிகார அமைப்பில் அறிக்கை சமர்பித்திருந்தது. ஒவ்வொன்றிற்கும் முதன்மையான மூலப்பொருள் கோதுமை மாவு. எனவே, அவை, ரொட்டிகளைப் போலவே அதே ஜி.எஸ்.டி. வரம்பில் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது.
இருப்பினும், மேம்பட்ட தீர்ப்புக்கான அதிகார அமைப்பு வழங்கிய தீர்ப்பை நிலைநாட்டிய குஜராத் மேல்முறையீட்டு ஆணையம், "மேல்முறையீட்டாளரால் வழங்கப்படும் பரோட்டக்கள் பிளைன் சப்பாத்தி அல்லது ரொட்டியிலிருந்து வேறுபட்டவை. மேலும், அவற்றை சாதாரண சப்பாத்தி அல்லது ரொட்டி மற்றும் பொருத்தமான வகைப்பாட்டின் கீழ் கருதவோ அல்லது உள்ளடக்கவோ முடியாது" என குறிப்பிட்டது.
ஜூன் மாதம், குஜராத் மேல்முறையீட்டு ஆணையம் வழங்கிய தீர்ப்பில், பேக் செய்யப்பட்ட அல்லது உறைந்த பரோட்டாகள் பொன்னிறமாக மாறும் வரை 3-4 நிமிடங்களுக்கு சமைக்கப்பட வேண்டும் என்பது எடுத்துக்காட்டப்பட்டது. நிறுவனம் தயாரிக்கும் வெவ்வேறு பரோட்டாகளில் கோதுமை மாவின் கலவை 36 சதவீதத்திலிருந்து 62 சதவீதம் வரை மாறுபடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டில், மேம்பட்டு தீர்ப்புக்கான ஆணையத்தின் கர்நாடக அமர்வு, மலபார் பரோட்டா மற்றும் கோதுமை பரோட்டா மூன்று முதல் ஏழு நாட்கள் வரை வைத்து உண்ணக்கூடியவை என்பதால் 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை ஈர்க்கும் என பெங்களூரைச் சேர்ந்த உணவு உற்பத்தியாளரிடம் தெரிவித்திருந்தது.