முன் எப்போதும் இல்லாத  வகையில் 2020-ஆம் ஆண்டுக்கு பின் கொரோனா தொற்று இந்தியாவில் குறைந்துள்ளது. சிகிச்சை பெற்று வீடு திரும்புவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 547 நபர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஏப்ரல், 2020 ஆண்டு பின் ஏற்படும் குறைந்த  பாதிப்பாகும்.


கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடங்கி மூன்று  ஆண்டுகள்  ஆகிய நிலையில் மக்களுக்கு இன்றளவும் பல இன்னல்களை கொடுத்து வருகிறது. இந்த கொடூர வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த வல்லரசு நாடுகள் உள்ளிட்ட அனைத்தும் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பல நாட்டு  நிறுவனங்கள் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளனர். இருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்றானது, கொரோனா, டெல்டா கொரோனா, ஒமிக்ரோன் அதனை தொடர்ந்து தற்போது NeocoV  என மாற்றம் அடைந்து மக்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.


முதல் தவணை தடுப்பூசி, இரண்டாம் தவணை தடுப்பூசி அதனை தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசிகள் என தடுப்பூசிகளும் அதிகரிக்கும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது என்பது உலக  நாடுகளுக்கு பெரும் சவாலாக இருந்தது வருகிறது.


இதன் மூலம், நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா கேசலோட் 4,46,66,924 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டுக்கு பின் 10,000 கீழ் குறைந்துள்ளது. அதே சமயம் மகாராஷ்டிராவில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,30,532 ஆக உயர்ந்துள்ளது.


ஏப்ரல் 8, 2020 அன்று மொத்தம் 540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 0.02 சதவீதமாக இருக்கிறது. அதே நேரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் விகிதம் 98.79 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று மத்திய  சுகாதார அமைச்சகம் அதனுடைய இணையதளத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 9,468 ஆக உள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் 2,839 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.  இதனால் தொற்றிலிருந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,26,924 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, நாடு தழுவிய கொரோனா  தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை நாட்டில் 219.80 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.


இந்தியாவின் கொரோனா தொற்று எண்ணிக்கை ஆகஸ்ட் 7, 2020 அன்று 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 இல் 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 இல் 40 லட்சத்தையும், செப்டம்பர் 16 அன்று 50 லட்சத்தையும், செப்டம்பர் 28 அன்று 60 லட்சத்தையும், அக்டோபர் 11 அன்று 70 லட்சத்தையும் தாண்டியது. நவம்பர் 20ம் தேதி 90 லட்சமும், டிசம்பர் 19ம் தேதி ஒரு கோடியுமாக பதிவானது.


மே 4 அன்று இரண்டு கோடி பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் கடந்த ஆண்டு ஜூன் 23 அன்று மூன்று கோடி மற்றும் இந்த ஆண்டு ஜனவரி 25 அன்று நான்கு கோடி என்ற மைல் கற்களை நாடு கடந்தது.