ராமஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அயோத்தியில் கட்டப்பட்டு வரும் மசூதி அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மசூதியை கட்டுவதற்காக பணி அமர்த்தப்பட்டுள்ள அறக்கட்டளை இது தொடர்பான தகவலை பகிர்ந்துள்ளது.


இந்தோ-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளையின் செயலாளர் அதர் உசேன் இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "மசூதி, மருத்துவமனை, சமூக சமையலறை, நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் வரைபடத்திற்கு இம்மாத இறுதிக்குள் அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம்.


விரைவில் மசூதி கட்டும் பணியை தொடங்குவோம். தன்னிப்பூர் அயோத்தி மசூதியின் கட்டுமானப் பணிகள் 2023 டிசம்பர் இறுதிக்குள் முடிவடையும். அதே போல, ஐந்து ஏக்கர் மௌலவி அகமதுல்லா ஷா வளாகத்தில் மேல் உள்ள கட்டமைப்புகள் பின்னர் கட்டப்படும்" என்றார்.


நீண்ட காலமாக விசாரிக்கப்பட்டு வந்த அயோத்தி வழக்கில், பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும், உத்தரப் பிரதேசத்தில் மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 


ஆகஸ்ட் 2020இல், கோயிலின் பூமி பூஜை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடத்தப்பட்டது. மேலும், ஜனவரி 2024இல் பக்தர்களுக்காக கோயில் திறக்கப்படும் என்று கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.


அடுத்த நாடாளுமன்றத் தேர்தல், 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கோயில் மற்றும் மசூதி கட்டி முடிக்கப்படும் நேரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


மசூதி கட்டுவதற்காக உத்தரபிரதேச சன்னி மத்திய வக்பு வாரியத்தால் உருவாக்கப்பட்ட இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை, மருத்துவமனை, சமூக சமையலறை, நூலகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றைக் கட்ட முடிவு செய்துள்ளது.


இதுகுறித்து அறக்கட்டளையின் செயலாளர் அதர் உசேன் கூறுகையில், "முன்மொழியப்பட்ட கட்டமைப்புகளின் கட்டுமானத்தை அறக்கட்டளை ஒரே நேரத்தில் தொடங்கும். மசூதி அதன் சிறிய அளவு காரணமாக முதலில் முடிக்கப்படும். காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்.


வளாகத்தில் மசூதி மற்றும் பிற கட்டமைப்புகளை நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவமனை 100 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டு பின்னர் 200 படுக்கை வசதியாக மேம்படுத்தப்படும். 


சமுதாய சமையலறை ஆரம்பத்தில் தினசரி 1,000 பேருக்கு உணவு வழங்கும் திறனைக் கொண்டிருக்கும். பின்னர் 2,000 நபர்களுக்கு உணவளிக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும். அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் இந்தோ-இஸ்லாமிய ஆராய்ச்சி மையம் மற்றும் நூலகத்தை உருவாக்க அறக்கட்டளை முடிவு செய்தது" என்றார்.