உலகின் மக்கள் தொகை அதிகமான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற உள்ளது. இந்தாண்டின் மத்திக்குள் சீனாவை விட இந்தியா 30 லட்சம் மக்கள் தொகை அதிகமாக பெற போகிறது என ஐநா தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான உலக மக்கள் தொகை அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் வெளியிட்டுள்ளது.


இந்தியாவின் மக்கள் தொகை:


அதன்படி, இந்தியாவின் மக்கள் தொகை, 1.4286 (142 கோடியே 86 லட்சம்) பில்லியனாக இருக்கும் என கணிக்கப்படடுள்ளது. அதே நேரத்தில், சீனாவின் மக்கள் தொகை 1.4257 (142 கோடியே 57 லட்சம்) பில்லியனாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 340 மில்லியன் (34 கோடி) மக்கள் தொகையுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 


2023ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் நாடுகளின் மக்கள் தொகை கணிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் இந்தியா, சீனாவைக் கடந்து செல்லும் என்று ஐநாவின் முந்தைய தரவுகளைப் பயன்படுத்தி மக்கள் தொகை வல்லுநர்கள் கணித்தனர். 


ஆனால், ஐநாவின் சமீபத்திய அறிக்கை, மக்கள் தொகை மாற்றம் எப்போது நடைபெறும் என்பதற்கான தேதியைக் குறிப்பிடவில்லை. மக்கள் தொகை தொடர்பாக இந்தியா மற்றும் சீனா அளிக்கும் தரவுகள்  தெளிவற்று உள்ளது என ஐநா மக்கள் தொகை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


குறிப்பாக இந்தியாவின் கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இல் நடத்தப்பட்டது. 2021 இல் நடைபெறவிருந்த அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதமாகிவிட்டதால், சீனாவை இந்தியா எந்த தேதியில் பின்னுக்கு தள்ளும் என்பதை கணிப்பது சாத்தியம் அல்ல என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


8.045 பில்லியன் உலக மக்கள்தொகையில் இந்தியாவும் சீனாவும் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் இருக்கும் என்றாலும், இரு ஆசிய நாடுகளின் மக்கள்தொகை வளர்ச்சி குறைந்து வருகிறது. இந்தியாவை விட சீனாவில் மிக வேகமாக குறைந்து வருகிறது.


வீழ்ச்சி அடையும் சீனாவின் மக்கள் தொகை:


கடந்த ஆண்டு, சீனாவின் மக்கள்தொகை 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல்முறையாக வீழ்ச்சியடைந்தது. இது ஒரு வரலாற்றுத் திருப்பம். சீன மக்கள் தொகையில் நீண்ட கால வீழ்ச்சியின் தொடக்கத்தைக் இது குறிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வீழ்ச்சி சீன பொருளாதாரம் மற்றும் உலகில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவின் ஆண்டு மக்கள்தொகை வளர்ச்சி 2011 முதல் சராசரியாக 1.2% ஆக உள்ளது. இது முந்தைய 10 ஆண்டுகளில் 1.7% ஆக இருந்தது.


இதுகுறித்து மக்கள் தொகை நிதியத்தின் இந்திய பிரதிநிதி ஆண்ட்ரியா வோஜ்னர் கூறுகையில், "மக்கள்தொகை கவலையைத் தூண்டவோ அல்லது எச்சரிக்கையை உருவாக்கவோ கூடாது. மாறாக, தனிப்பட்ட உரிமைகள் மற்றும் விருப்பங்கள் நிலைநிறுத்தப்பட்டால், அவை முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் அபிலாஷைகளின் அடையாளமாக பார்க்கப்பட வேண்டும்" என்றார்.