நடப்பு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்தாண்டு மே மாதம் நிறைவடைய உள்ளதால், மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக, முக்கியத்துவம் வாய்ந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
மும்பை கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள்:
இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் பாஜகவை வீழ்த்தும் ஒற்றை எண்ணத்துடன் ஒரே அணியில் இணைந்துள்ள I.N.D.I.A கூட்டணியின் மூன்றாவது கூட்டம் இன்று மும்பையில் நடைபெறே்றது.
அதில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இயன்றவரை ஒன்றாகப் போட்டியிடுவதற்கு இந்திய கூட்டணி தீர்மானித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உடனடியாகத் தொடங்கப்பட்டு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் கூடிய விரைவில் முடிக்கப்படும்.
அதோபோல, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அக்கறை சார்ந்த, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து எழுப்ப கூடிய விரைவில் பேரணிகளை நடத்த இந்தியா கூட்டணி தீர்மானித்துள்ளது.
நான்கு முக்கிய குழுக்கள்:
ஜுடேகா பாரத், ஜீதேகா இந்தியா (பாரதம் ஒன்றிணைந்தால், இந்தியா வெற்றி பெறும்) என்ற கருப்பொருளுடன் வெவ்வேறு மொழிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். கூட்டணி கட்சிகளின் தகவல் தொடர்பு மற்றும் ஊடக உத்திகள் மற்றும் பிரச்சாரங்களை ஒருங்கிணைக்க இந்தியா கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இதை தொடர்ந்து, இந்திய கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், "நான்கு முக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்களில் அனைத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர்" என்றார்.
பின்னர் பேசிய உத்தவ் தாக்கரே, "மூன்றாவது கூட்டம் (இந்தியா கூட்டணி) இன்று நடைபெற்றது, நாளுக்கு நாள் இந்தியா வலுவடைந்து வருகிறது. நாம் நெருங்கி, படிப்படியாக முன்னேறி வர, இந்தியாவின் போட்டியாளர் கவலை கொள்கிறார். நாம் அனைவரும் தேசபக்தர்கள், நமது ஒற்றுமையே தேசபக்தர்களின் ஒற்றுமை என்று சொல்லியிருந்தேன்.
வரும் தேர்தலில் போராடுவோம் என்று முடிவு செய்துள்ளோம். கொடுங்கோன்மைக்கு எதிராக போராடுவோம். இந்தியா என் குடும்பம், நாம் அனைவரும் இந்தியர்கள் என்று பெங்களூருவில் சொல்லியிருந்தேன். தேர்தலின் போது 'சப்கா சாத், சப்கா விகாஸ்' என்ற பிரச்சாரத்தை கேட்டேன். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, உங்களுடன் இருப்பேன் என சொன்ன அனைவரும் வெளியேறிவிட்டனர். ஒருவரின் நண்பருக்கு மட்டுமே வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த அரசியலை தொடர அனுமதிக்க மாட்டோம்" என்றார்.