I.N.D.I.A கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு இன்று அமைக்கப்பட்டுள்ளது. 14 பேர் கொண்ட குழுவில் காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் ​​பவார், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக எம்பி டி. ஆர். பாலு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி, உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத், பிகார் துணை முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான தேஜஸ்வி யாதவ், ஐக்கிய ஜனதா கட்சியின் லல்லன் சிங், ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சத்தா, ஜார்க்கண்ட் முதலமைச்சரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன், சமாஜ்வாதி கட்சியின் ஜாதவ் அலிகான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முப்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒருவரும் குழுவில் இடம்பெற்றுள்ளார்.


பாஜகவை வீழ்த்த ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள்:


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் பாஜகவை வீழ்த்தும் ஒற்றை எண்ணத்துடன் ஒரு அணியில் சேர்ந்த எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது.


இதைதொடர்ந்து, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அதில், கூட்டணிக்கு I.N.D.I.A என பெயர் சூட்டப்பட்டது. தொடர்ந்து, கூட்டணியின் அடுத்த கட்ட பணிகள் தொடர்பாக ஆலோசிக்க மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது.


சாந்தாகுரூஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்,  பிகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.


ஒருங்கிணைப்பு குழுவில் தமிழ்நாடு முதலமைச்சர்:


இந்த நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு  அமைக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அதில் இடம்பெற்றிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின்  I.N.D.I.A கூட்டணிக்கு அதில் உள்ளா எல்லாக் கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் லோகோவை வடிவமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.


இதற்காக 9 லோகோக்கள் உருவாக்கப்பட்டு, அதில் 3 லோகோக்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் ஒன்று இன்றைய ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களையும் சந்தித்தனர். 


அப்போது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து முடிவு எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.