ஆந்திர மாநிலம் தேவர்கட் மலையில் விஜயதசமியை முன்னிட்டு மல்லேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்ற தடியடி திருவிழாபில் 2 பேர் உயிரிழந்தனர்.
கடந்த வாரம் முதல் நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நவராத்திரி பண்டிகை நேற்று முடிவுக்கு வந்தது. நவராத்திரி பண்டிகை என்பது 9 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். அதில் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபட்டு வணங்குவர். ஒரு மனிதனுக்கு கல்வி, செல்வம், ஞானம் ஆகிய மூன்றும் முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
திங்கள்கிழமை ஆயுத பூஜையும் நேற்று விஜயதசமியும் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதில் இருக்கும் ஹிந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் இது ஒன்றாகும். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு முறை கடைப்பிடிக்கப்படும். தமிழ்நாட்டில் பொதுவாக சரஸ்வதி பூஜையன்று வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு பொட்டு வைத்து பூஜை செய்வார்கள். சாமிக்கு நெய்வேத்தியமாக பொரி, கடலை, அவல், பழங்கள், வடை, பாயாசம், ஆகியவற்றை வைத்து வழிபடுவார்கள். குறிப்பாக வீட்டில் இருக்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சுத்தமாக கழுவி மாலை அணிவித்து அதற்கு பூஜை செய்வார்கள். இப்படி செய்வதன் மூலம் வாகனத்தில் எந்த பழுதும் ஏற்படாமல், விபத்துக்குள்ளாகாமல் இருக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல், நேற்று விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் வித்யாரம்பம் நடைபெற்றது.
இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் இப்படி தான் கொண்டாடப்படும். இந்நிலையில் ஆந்திரா மாநில அமராவதியில் விஜயதசமியை முன்னிட்டு வித்தியாசமான திருவிழா நடைபெற்றது. ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தின் தேவர்கட் மலையில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மல்லேஸ்வர சுவாமி கோயிலில் கல்யாண உற்சவ விழா நடைபெறும்.
கல்யண உற்சவ விழா முடிந்தவுடன், உற்சவ மூர்த்தியை யார் கைப்பற்றுவது என்பது தொடர்பாக அப்பகுதியில் இருக்கும் கிராம மக்கள் இடையே தடியடி திருவிழா நடைபெறும். அப்படி அந்த தடியடி திருவிழாவில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே அந்த உற்சவரை கைப்பற்றுவார். அந்த வகையில் நேற்று கல்யாண் உற்சவ விழா முடிந்தவுடன், நள்ளிரவு 12 மணிக்கு 23 கிராம மக்கள் இடையே தடியடி திருவிழா நடைபெற்றது.
அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து தீவட்டி, தடி ஆகியவற்றை ஏந்தியபடி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த நிலையில் 2 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த திருவிழாவை அதிகாரிகள் தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் ஆனால் ஊர் மக்கள் தங்கள் பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் வகையில் இந்த தடியடி உற்சவ திருவிழாவை நடத்தி வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் திடீரென நிறம் மாறிய புதுச்சேரி கடல் நீர் - காரணம் என்ன தெரியுமா ?
குலசையில் விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹார விழா - லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்