கடந்த சில மாதங்களாக இந்திய, மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தில் இந்திய பிரதமர் மோடியும் மாலத்தீவு அதிபர் முய்சுவும் கையெழுத்திட்டுள்ளனர். 


கடந்தாண்டு நவம்பர் மாதம், மாலத்தீவில் சீன ஆதரவு முகமது முய்சு அரசாங்கம் அமைந்ததில் இருந்தே, இந்திய - மாலத்தீவு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த சுமூகமாக உறவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சியை பிடித்தவர் முகமது முய்சு.


இந்தியா - மாலத்தீவு உறவு:


தேர்தல்போதே, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்றுவேன் என வாக்குறுதி அளித்தார் முகமது முய்சு. மாலத்தீவு அதிபராக அவர் பதவியேற்ற உடனேயே, இந்திய ராணுவத்தை வெளியேற்றினார். இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. 


பிரதமர் மோடி குறித்து கடந்தாண்டு மாலத்தீவு அமைச்சர்கள் தெரிவித்த சர்ச்சை கருத்து உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது. இந்த சூழலில், முதல்முறையாக இரு தரப்பு பயணமாக மாலத்தீவு அதிபர் முய்சு, தன்னுடைய மனைவி சஜிதா முகமதுடன் நேற்று இந்தியா வந்தார்.


இந்த நிலையில், இந்திய, மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் விதமாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி, மாலத்தீவு அதிபர் முய்சு ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.


அள்ளி கொடுக்கும் பிரதமர் மோடி:


இரு நாட்டு தலைவர்களின் சந்திப்புக்கு பிறகு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், மோடி கூறியிருப்பதாவது, "மாலத்தீவின் நெருங்கிய நண்பராக இந்தியா உள்ளது. அத்தியாவசியப் பொருட்களாக இருந்தாலும், கோவிட் சமயத்தில் தடுப்பூசிகளாக இருந்தாலும், குடிநீராக இருந்தாலும் சரி. நாங்கள் நல்ல அண்டை நாடாக இருந்துள்ளோம்.


Haa Dhaalu Atoll பகுதியில் Hanimaadhoo சர்வதேச விமான நிலையத்தை இந்தியா திறந்து வைத்துள்ளது. முன்னதாக, 700 வீடுகளை கட்டி கொடுத்தது. அத்துடன், மாலத்தீவு நாட்டில் 28 தீவுகளில் கிட்டத்தட்ட 30,000 மக்களுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் திட்டத்தை அமைத்து தந்துள்ளது" என்றார்.


சீனாவுக்கு நெருக்கமானவராக முய்சு பார்க்கப்படுகிறார். முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் ஆட்சிக் காலத்தில், உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீனாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை மாலத்தீவு கடனாக பெற்றது. முய்சு ஆட்சி காலத்தில் சீனாவுக்கு மட்டும் இன்றி சீன முதலீட்டாளர்களுக்கும் இது மிகப் பெரிய வாய்ப்பை தரும் எனக் கூறப்படுகிறது.