பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று சைப்ரஸ் நாட்டு அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ், அந்நாட்டின் உயரிய விருதான "மாரியோஸ் III கிராண்ட் கிராஸ்" என்ற விருதை வழங்கினார். கடந்த 2014ஆம் ஆண்டு, பிரதமராக பதவி ஏற்றியதிலிருந்து மோடிக்கு பல சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, சைப்ரஸ் நாட்டின் விருதினை பெறுவதன் மூலம் 23ஆவது சர்வதேச விருதுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் பிரதமர் மோடி.
விருதுகளாக வாங்கி குவிக்கும் பிரதமர் மோடி:
இதற்கு நன்றி தெரிவித்த மோடி, 140 கோடி இந்திய மக்களின் சார்பாக இந்த விருதினை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். அதோடு, அந்நாட்டு அதிபர், அரசு மற்றும் மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்தியா-சைப்ரஸ் இடையே கட்டமைக்கப்பட்டுள்ள பரஸ்பர நம்பிக்கை மற்றும் நட்புறவு ஆகியவற்றின் அடிப்படையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால உறவுகளுக்கு இந்த விருதை அவர் அர்ப்பணித்தார்.
இந்தியாவுக்கு பெருமை:
இந்த விருது இந்தியாவின் "வசுதைவ குடும்பகம்" அல்லது "உலகம் ஒரே குடும்பம்" என்ற பழமையான தத்துவத்தை அங்கீகரிப்பதாக உள்ளது என்றும், உலகளவில் அமைதி, முன்னேற்றத்திற்கான தொலைநோக்கு பார்வையை வழிநடத்துவதாக உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியா-சைப்ரஸ் இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் வகையிலும், பன்முகத்தன்மையை மேம்படுத்தும் வகையிலும், பிரதமர் இந்த விருதை ஏற்றுக்கொண்டார். அமைதி, பாதுகாப்பு, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, வளம், ஆகியவற்றில் இவ்விரு நாடுகளின் வலுவான நட்புறவின் அடையாளமாக இந்த விருது அமைந்துள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
லிஸ்ட் போயிட்டே இருக்கு!
பிரதமர் மோடி பெற்ற மற்ற விருதுகள்:
கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் லோகோ:
பசிபிக் தீவு நாடுகளின் ஒற்றுமைக்காக உழைத்ததற்காகவும், உலகளாவிய தெற்கின் பிரச்னைகளை முன்னெடுத்துச் சென்றதற்காகவும் மிக உயர்ந்த குடிமகன் விருதை பப்புவா நியூ கினியா வழங்கியது.
கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் பிஜி:
கடந்த 2023ஆம் ஆண்டு, மே மாதம், பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமையை அங்கீகரித்து பிஜியின் உயரிய விருது வழங்கப்பட்டது.
பலாவ் குடியரசின் எபகல் விருது:
கடந்த 2023ஆம் ஆண்டு, மே மாதம், பப்புவா நியூ கினியாவிற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு எபகல் விருதை அந்நாட்டு ஜனாதிபதி சுராங்கல் எஸ். விப்ஸ் ஜூனியர் வழங்கினார்.
ஆர்டர் ஆஃப் தி ட்ரூக் கியால்போ:
கடந்த 2021ஆம் ஆண்டு, டிசம்பரில் பிரதமர் மோடிக்கு மிக உயர்ந்த விருதான ஆர்டர் ஆஃப் ட்ருக் கியால்போவை பூடான் வழங்கி கௌரவித்தது.
அமெரிக்க அரசு வழங்கிய லெஜியன் ஆஃப் தி மெரிட்:
சிறப்பான சேவை புரிந்ததற்காகவும் சாதனைகளை படைத்ததற்காகவும் அமெரிக்க பாதுகாப்பு படை இந்த விருதை வழங்கி வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு, பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.