இன்று மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையொட்டி, மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். 

  


"சூரியக் கடவுள் மற்றும் இயற்கை வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட மகாபர்வ் சாத்தில் அனைத்து நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.


சூரிய சக்தி:


சூரிய தேவன் அளிக்கும் வரம் தான் சூரியசக்தி. இந்த சூரிய சக்தி என்பது எப்படிப்பட்ட விஷயம் என்றால், ஒட்டுமொத்த உலகும் தனது எதிர்காலமாக இதைப் பார்க்கிறது, நம் பாரத நாட்டைப் பொறுத்த மட்டிலே, சூரியதேவன் வழிபடும் தெய்வம் மட்டுமல்ல, வாழ்க்கைமுறையின் மையமாகவும் இருக்கிறது.


பாரதம், இன்று தனது பாரம்பரியமான அனுபவங்களை நவீன விஞ்ஞானத்தோடு இணைத்து வருகின்ற வேளையில், இன்று நாம் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயார் செய்யும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இடம் பெற்றிருக்கிறோம். சூரியசக்தியால், நமது தேசத்தின் ஏழைகள் வாழ்க்கைகளில் மாற்றம் ஏற்படுகிறது.


தமிழ்நாட்டில், காஞ்சிபுரத்தில் இருக்கும் ஒரு விவசாயி கே. எழிலன், பிரதம மந்திரி குசும் திட்டத்தினால் ஆதாயம் அடைந்தார். தனது வயலில் பத்து குதிரைசக்தியுடைய சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டைப் பொருத்தினார். இப்போது இவர், தனது வயலுக்காக மின்சாரத்துக்கான செலவு செய்ய வேண்டியிருக்கவில்லை. வயலில் நீர்ப்பாசனத்திற்காக இப்போது இவர் அரசின் மின்வழங்கலையும் சார்ந்திருக்கவில்லை.


மாதம் முழுவதும் மின்சாரத்தைப் பயன்படுத்திய பிறகு உங்களுக்கு மின்சார ரசீது வருவதற்கு பதிலாக, மின்சாரத்திற்காக உங்களுக்குப் பணம் வரும் என்ற வகையில் நீங்கள் எப்போதாவது கற்பனை செய்து பார்த்ததுண்டா? சூரியசக்தியானது இதையும் செய்து காட்டியிருக்கிறது.






மோடேரா கிராமம்


சில நாட்கள் முன்பாக, தேசத்தின் முதல் சூரிய கிராமமான, குஜராத்தைச் சேர்ந்த மோடேரா கிராமம் சூரிய கிராமத்தின் பெரும்பான்மையான வீடுகள், சூரியசக்தியை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டன. இப்போது அங்கே பல வீடுகளில், மாதத்தின் இறுதியில் மின்சாரத்திற்கான ரசீது வருவதில்லை, மாறாக, மின்சாரம் ஏற்படுத்திக் கொடுத்த வருமானத்திற்கான காசோலை தான் வருகின்றது. இதைப் பார்த்த பிறகு, இப்போது தேசத்தின் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் கிராமத்தையும் சூரியசக்தி கிராமமாக மாற்றித் தர வேண்டும் என்று கடிதங்கள் எழுதுகிறார்கள்.


விண்வெளி துறை:


மேலும், நம்முடைய தேசம் சூரியசக்தித் துறையோடு கூடவே, விண்வெளித்துறையிலும் அற்புதங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இன்று, பாரதத்தின் சாதனைகளைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறது. ஒரே நேரத்தில் 36 செயற்கைக்கோள்களை, சில நாட்கள் முன்பாக விண்ணில் ஏவியதை நீங்களே கவனித்திருக்கலாம். தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாகக் கிடைத்த இந்த வெற்றி, ஒருவகையில் நமது இளைஞர்கள் தேசத்திற்கு அளித்த சிறப்பு தீபாவளிப் பரிசு என்று கொள்ளலாம்.




இந்த ஏவுதல் காரணமாக, கஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும், கட்ச் முதல் கோஹிமா வரையும், ஒட்டுமொத்த தேசத்திலும் டிஜிட்டல் இணைப்புத் திசையில் பலம் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதன் துணையோடு, மிகவும் தொலைவான பகுதிகளையும் தேசத்தின் பிற பாகங்களோடு எளிதாக இணைத்து விடலாம். தேசம் தற்சார்பு உடையதாக ஆகும் போது, எப்படி வெற்றியின் புதிய உச்சங்களைத் தொட முடிகிறது என்பதற்கான எடுத்துக்காட்டாகும் 


உலகளாவிய வர்த்தகச் சந்தை:


பாரதத்திற்கு க்ரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பம் மறுக்கப்பட்ட காலம். ஆனால் பாரதத்தின் விஞ்ஞானிகள், உள்ளூர் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், இன்று இதன் உதவியால் ஒரே நேரத்தில் பலடஜன் செயற்கைக்கோள்களை அனுப்பவும் முடிந்திருக்கிறது. இந்த ஏவுதலோடு கூடவே, பாரதம் உலகளாவிய வர்த்தகச் சந்தையில் ஒரு பலமான சக்தி என்று ஆகி இருக்கிறது, இது விண்வெளித்துறையில் பாரதத்திற்குப் புதிய கதவுகளையும் திறந்து விட்டிருக்கிறது.


வளர்ந்த பாரதம் என்ற சங்கல்பத்தை மனதில் ஏந்தி நாம் பயணிக்கிறோம், அனைவரின் முயற்சியாலும், நமது இலக்குகளை நம்மால் அடைய முடியும். பாரதத்தில் விண்வெளித்துறையில் முதலில் அரசு அமைப்புகள் மட்டுமே பங்கெடுத்துக் கொண்டிருந்தன, பாரதத்தின் தனியார் துறைக்கு இதைத் திறந்து விட்ட பிறகு இதிலே புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.


பாரதநாட்டுத் தொழில்துறையும், ஸ்டார்ட் அப்புகளும் இந்தத் துறையில் புதியபுதிய கண்டுபிடிப்புக்களையும், புதியபுதிய தொழில்நுட்பங்களையும் புகுத்துவதில் ஈடுபட்டிருக்கின்றன. குறிப்பாக, IN-SPACe இன் துணையோடு, இந்தத் துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவிருக்கின்றன" என பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.