சமீபத்தில், உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக ஃபின்லாந்து முதலிடம் பெற்றது. இந்தப் பட்டியலில் இந்தியா 125ஆவது இடத்தைப் பிடித்தது. கால்அப் வேர்ல்ட் போல் நிறுவனம் சேகரித்த தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டது.
மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. கணக்கெடுப்பின்போது மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிா்ணயிக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), ஆயுள்காலம், வாழ்வில் முடிவெடுப்பதற்கான சுதந்திரம், சமூக ஆதரவு, ஊழலற்றத்தன்மை உள்ளிட்டவை தொடா்பாக ஆராயப்பட்டது.
இதன் அடிப்படையில், எந்த நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பது தெரிய வந்தது. இந்த பட்டியலில் இந்தியா அடிமட்ட இடத்தை பிடித்தது பல்வேறு விதமான கேள்விகளுக்கு வழிவகுத்தது. குறிப்பாக, மனித வள மேம்பாடு குறியீட்டில் இந்திய மோசமாக செயலாற்றி இருப்பது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.
இந்தியாவின் மகிழ்ச்சியான மாநிலம்:
இந்நிலையில், இந்திய மாநிலங்களிலேயே மகிழ்ச்சியான மாநிலம் எது என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்தில் மூலோபாய துறை பிரிவு பேராசிரியராக பணியாற்றி வரும் ராஜேஷ் கே. பில்லானியா, இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்.
அதில், இந்தியாவின் மிகழ்ச்சியான மாநிலம் மிசோரம் என்பது தெரிய வந்துள்ளது. 100 சதவீத கல்வியறிவு பெற்ற இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் உள்ள மிசோரம், மிகவும் கடினமான சூழ்நிலையிலும் மாணவர்கள் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குகிறது என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"குடும்ப உறவுகள், வேலை தொடர்பான பிரச்னைகள், சமூகப் பிரச்னைகள் மற்றும் தொண்டு, மதம், மகிழ்ச்சியில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் மற்றும் உடல் மற்றும் மன ஆரோக்கியம் உள்ளிட்ட ஆறு விஷயங்களின் அடிப்படையில் மிசோரமின் மகிழ்ச்சிக் குறியீடு அமைந்துள்ளது.
ஆய்வறிக்கை சொல்வது என்ன?
மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் உள்ள அரசு மிசோ உயர்நிலைப் பள்ளியின் (ஜிஎம்ஹெச்எஸ்) மாணவர், சிறுவயதிலேயே அவரது தந்தை தனது குடும்பத்தைக் கைவிட்டதால் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இருந்தபோதிலும், அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார். படிப்பில் சிறந்து விளங்குகிறார். பட்டய கணக்காளர் ஆகலாம் அல்லது சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுதலாம் என்று நம்பிக்கை கொண்டுள்ளார். இம்மாதிரியாக பல எடுத்துக்காட்டுகள் இருக்கிறது.
மிசோ சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையும், பாலினத்தைப் பொருட்படுத்தாமல், சீக்கிரம் சம்பாதிக்கத் தொடங்குகின்றனர். எந்தப் பணியும் மிகச் சிறியதாகக் கருதப்படுவதில்லை. இளைஞர்கள் பொதுவாக 16 அல்லது 17 வயதிற்குள் வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள். இது ஊக்குவிக்கப்படுகிறதுய மேலும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு இடையே எந்தப் பாகுபாடும் இல்லை" ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் லால்ரின்மாவி கியாங்ட், ஆய்வறிக்கை குறித்து பேசுகையில், "மிசோரமின் சமூக அமைப்பும் அதன் இளைஞர்களின் மகிழ்ச்சிக்கு பங்களிக்கிறது. நாங்கள் ஜாதியற்ற சமூகமாக இருக்கிறோம். மேலும், படித்தே ஆக வேண்டும் என்ற பெற்றோரின் அழுத்தம் இங்கு குறைவு" என்றார்.