சூரியனிலிருந்து வெளிவரும் வெப்பம் புவியை அடைந்தவுடன், அது பெருமளவு பிரதிபலிக்கப்பட்டு மீண்டும் வானுக்கே செல்கிறது. அப்படிப் பிரதிபலிக்கப்படும் வெப்பம் பூமியின் வளிமண்டலத்தை விட்டு வெளியேற விடாமல் தடுக்கும் ஆற்றல் கரிம வாயுக்களான கார்பன் வாயுக்களுக்கு உண்டு. 


கார்பன் வெளியேற்றத்தால் ஏற்படும் ஆபத்துகள்:


இவ்வாறு வெப்பத்தைத் தடுக்கும் வாயுக்களுக்கு பசுமைங்குடில் வாயுக்கள் என்று பெயர் (Greenhouse gases). கார்பன் டை ஆக்ஸைடு (Carbon di-oxide), மீத்தேன் (Methane), நைட்ரஸ் ஆக்ஸைடு (Nitrous Oxide), ஓசோன் (Ozone) மற்றும் நீராவி (Water vapour) ஆகியவை பசுங்குடில் வாயுக்கள் ஆகும்.


இவற்றில் கார்பன் டை ஆக்ஸைடுதான் கார்பன் வாயுக்களில் அதிகளவில் வளிமண்டலத்தில் நிறைந்திருக்கிறது. நிலக்கரி, எண்ணெய் போன்ற புதை படிவ எரிபொருட்களை நாம் அதிகளவில் உபயோகப்படுத்துவதன் மூலம் கார்பன் டை ஆக்ஸைடு அதிகளவில் வெளியிடப்படுகிறது. இந்த கார்பன் வெளியேற்றத்தின் காரணமாகவே காலநிலை மாற்றம் ஏற்படுகிறது. 


காலநிலை மாற்றதாத்தால் பனிமலை உருகி, கடம் மட்டம் அதிகரிக்கிறது. தீவிரமான வானிலை நிகழ்வுகள் ஏற்படுகிறது. எனவே, இதை தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விளைவாக எதிர்பார்த்ததை காட்டிலும் கார்பன் வெளியேற்றத்தை இந்தியா வேகமாக குறைத்து வருகிறது.


மகத்தான சாதனை படைத்த இந்தியா:


கடந்த 14 ஆண்டுகளில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரித்ததன் காரணமாகவும் வனப்பகுதியை அதிகரித்ததன் காரணமாகவும் இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் 33 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக புதிய அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. ஐநாவிடம் இந்தியா சமர்பிக்க உள்ள அந்த அறிக்கையில் பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.


"2005 ஆம் ஆண்டிலிருந்து 2030 ஆம் ஆண்டிற்குள் கார்பன் வெளியேற்றத்தின் தீவிரத்தை 45% குறைக்க, காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் (UNFCCC) உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான பாதையில் இந்தியா பயணித்து வருகிறது.


மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) ஒவ்வொரு யூனிட் அதிகரிப்புக்கும் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்களின் மொத்த அளவு, 2005 முதல் 2019 வரை 33 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சராசரி கார்பன் வெளியேற்ற குறைப்பு விகிதம் 2014-2016 காலகட்டத்தில் வெறும் 1.5% இல் இருந்து 2016-2019 காலகட்டத்தில் ஆண்டுதோறும் 3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐநாவிடம் சமர்பிக்கப்பட உள்ள அந்த அறிக்கை குறித்து பேசிய உயர்மட்ட அதிகாரிகள், "கார்பன் வெளியேற்றத்தின் தீவிரம் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்திலிருந்து தனது பொருளாதார வளர்ச்சியை இந்தியா முழுமையாக துண்டிக்க முடிந்ததையே இது காட்டுகிறது.


காடுகளின் பரப்பளவை கணிசமாக அதிகரித்தது, புதைபடிவமற்ற உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டங்களை கொண்டு வந்தது, தொழில்துறை, வாகனம் மற்றும் எரிசக்தி துறைகளில் கார்பன் வெளியேற்றத்தை இலக்காகக் கொண்ட திட்டங்களை அமல்படுத்தியது இந்தியா கார்பன் வெளியேற்ற தீவிரமாக குறைக்க வழிவகுத்தன" என தெரிவித்தனர்.