Gaganyaan Mission Test: ககன்யான் திட்டத்திற்கான விண்கலத்தில் இருந்து வீரர்கள் பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பான பரிசோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.


பரிசோதனையில் பிரச்னை:


சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மீது இஸ்ரோ தனது முழு கவனத்தையும் செலுத்தியுள்ளது. இந்நிலையில், ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை விண்கலமான (டிவி-டி1) என்ற ஒற்றை-நிலை திரவ ராக்கெட் இன்று காலை 8 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மோசமான வானிலை காரணமாக 30 நிமிடங்கள் தாமதமானது. அதேநிலை தொடர்ந்ததால், பரிசோதனை முயற்சி 8.45 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக சோதனை முயற்சியை தொடங்கிய நிலையில், கவுண்டவுனில் கடைசி 5 விநாடிகள் இருந்தபோது பரிசோதனை கைவிடப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது.


இஸ்ரோவின் பரிசோதனை வெற்றி:


விண்கலத்தில் உள்ள சிறு தொழில்நுட்ப கோளாறால் பரிசோதனை ஒத்திவைக்கப்படுவதாகவும், அதுதொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு அடையாளம் காணப்பட்டு சரி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, சரியாக 10 மணியளவில் டிவி-டி1 எனும் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. குறிப்பிட்ட இலக்கை அடைந்த பிறகு அந்த விண்கலத்தில் இருந்து, ராக்கெட்டின் க்ரூ மாட்யூல் வெற்றிகரமாக பிரிந்து பாரசூட் உதவியுடன் கடலில் தரையிறங்கியது.






சாதித்தது என்ன?


 3 ஆராய்ச்சியாளர்களை விண்வெளிக்கு அனுப்பி, அங்கு பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு மீண்டும் அவர்களை பாதுகாப்பாக புவிக்கு அழைத்து வருவது தான் ககன்யான் திட்டத்தின் நோக்கம். இதற்காக வடிவமக்கப்படும் ராக்கெட்டில் 3 நிலைகள் இருக்கும். அதில் மையப்பகுதியில் தான் ஆராய்ச்சியாளர்கள் இருப்பார்கள். இந்த நிலையில் விண்கலம் தனது பயணத்த தொடங்கியதுமே, எதிர்பாராத விதமாக ஏதேனும் கோளாறு கண்டறியப்பட்டால் உடனடியாக ஆராய்ச்சியாளர்கள் இருக்ககும் எஸ்கேப் சிஸ்டம் மட்டும் தானாகவே உடனடியாகெ வெளியேறும். அதிலிருந்து க்ரூ மாட்யூல் தனியாக பிரிந்து, பாராசூட் உதவியுடன் இந்திய பெருங்கடலில் தரையிறங்க வேண்டும். அப்படி பாதுகாப்பாக தரையிறங்கும் முயற்சியின் வெற்றி தோல்வியை உறுதி செய்வதற்காக தான் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் வெற்றி கிடைத்து இருப்பது இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் மிக முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.


சோதனை விண்கல விவரம்:


பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட TV-D1 விண்கலமானது  முன்புறத்தில் க்ரூ மாட்யூல் மற்றும் க்ரூ எஸ்கேப் சிஸ்டம் கொண்டிருந்தது. இதில் மாற்றியமைக்கப்பட்ட VIKAS இன்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது. 34.9 மீட்டர் உயரமும், 44 டன் எடையும் கொண்டிருந்து.  எதிர்காலத்தில் இஸ்ரோ திட்டமிட்டுள்ள 20 பெரிய சோதனைகளில் இதுவே முதன்மையானது. 2035ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையத்தை இஸ்ரோ அமைத்து, 2040ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்பும் பிரதமர் மோடி இலக்கை நிர்ணயித்துள்ளார். அதற்கு உந்துசக்தியாக இந்த சோதனயின் வெற்றி அமைந்துள்ளது. அடுத்தடுத்த தகுதிச் சோதனைகள் நடத்தப்பட்டு, 2025ம் ஆண்டு ககன்யான் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.