India Canada Diplomats: காலிஸ்தானி தீவிரவாதி நிஜ்ஜார் கொலை விவகாரத்தில், இந்தியா மற்றும் கனடா இடையேயான உறவு மேலும் மோசமடைந்துள்ளது.


கனடா அதிகாரிகள் 6 பேர் வெளியேற்றம்:


காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவிற்கான கனடாவின் உயர் தூதரக அதிகாரி ஸ்டீவர்ட் ரோஸ் வீலர் உட்பட ஆறு தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், தூதரக உயர் அதிகாரி ஸ்டீவர்ட் ரோஸ் வீலர் உடன்,  பாட்ரிக் ஹெபர்ட், மேரி கேத்தரின் ஜோலி, லான் ரோஸ் டேவிட் ட்ரைட்ஸ், ஆடம் ஜேம்ஸ் சூப்கா, மற்றும் பவுலா ஓர்ஜுவேலா ஆகியோர், வரும் சனிக்கிழமை (அக்டோபர் 19) இரவு 11:59 மணிக்குள் அல்லது அதற்கு முன்னதாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


அதிகாரிகளை திருமப்ப் பெற்ற இந்தியா 


நிஜ்ஜார் கொலை தொடர்பான விசாரணையில், கனடாவிற்கான இந்தியாவின் தூதர் சஞ்சய் குமார் வர்மாவின் பெயரை குறிப்பிட்டதற்காக கனடாவை வெளியுறவு அமைச்சகம் கடுமையாக சாடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.  அதனைதொடர்ந்தே, கனடாவிற்கான இந்தியாவின் உயர் தூதரக அதிகாரி மற்றும் பிற குற்றம்சாட்டப்பட்ட  தூதரக அதிகாரிகளை இந்தியா திரும்பப் பெற முடிவு செய்த சில மணிநேரங்களில், கனடா தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 


”கனடா மீது நம்பிக்கை இல்லை”


கனடாவின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஸ்டீவர்ட் வீலரை நேரில் அழைத்து வெளியுறவு அமைச்சகம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சந்திப்பு தொடர்பான அறிக்கையில், “தீவிரவாதம் மற்றும் வன்முறை சூழலில், ட்ரூடோ அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதாக அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தற்போதைய கனடா அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, உயர் ஆணையரை திரும்பப் பெற இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதம், வன்முறை மற்றும் பிரிவினைவாதத்திற்கு ட்ரூடோ அரசு அளித்து வரும் ஆதரவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செப்டம்பர் 2023 இல், நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனைதொடர்ந்து,  இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் கடுமையான அழுத்தத்திற்கு உட்பட்டன. ஆனாலும், தற்போது வரை இந்தியாவின் தலையீடு தொடர்பாக எந்த தகவலையும் கனடா அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.