வக்பு வாரியம் என்பது இந்தியாவில் சட்டப் போராட்டங்கள், குழப்பம் மற்றும் சர்ச்சைகளுக்கு பெயர் போன ஒரு அமைப்பாகும். இஸ்லாமிய சட்டத்தில் ஆழமாக வேரூன்றிய வக்பு அமைப்பு, இந்தியாவில் மத மற்றும் கலாச்சார இயக்கவியலில் செல்வாக்கு செலுத்தியது மட்டுமின்றி நில உரிமை மற்றும் ஆளுகை தொடர்பான மோதல்களுக்கும் வழிவகுத்தது.
சர்ச்சையை கிளப்பும் வக்பு மசோதா:
இந்த சூழலில் அதன் சீர்திருத்தங்களுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருவதால், வக்பு வாரியம் தொடர்பான விவாதம் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. மத்திய அரசு முன்னெடுத்துள்ள புதிய சட்டமசோதா, வக்பு சொத்துக்களின் அளவு மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படுவது பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.
பல ஆண்டுகளாக தொடரும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் வகையில், வக்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர, மத்திய அரசு புதிய சட்ட திருத்த மசோதாவை முன்மொழிந்துள்ளது. அது கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், வக்பு வாரியம் சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும் முயல்வதாக கூறப்படுகிறது.
வக்பு நிலங்களை நிர்வகிப்பதற்கான மிகவும் வலுவான கட்டமைப்பை நிறுவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது, நிலங்கள் சரியான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது எனவும் அரசு தரப்பு தெரிவிக்கிறது. முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் பல இஸ்லாமிய அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளன. இந்த மசோதா தங்கள் மத உரிமைகள் மீதான தாக்குதல் என்று கூறுகின்றன.
கேரள அரசு அதிரடி:
இந்த நிலையில், வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய வக்பு, ஹஜ் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அப்துரஹிமான், "இந்த மசோதா வக்பு விவகாரங்கள் தொடர்பான மாநில உரிமைகளை மீறும் வகையில் உள்ளது.
வக்பு சொத்துக்களை மேற்பார்வையிடும் வக்பு வாரியங்கள் மற்றும் தீர்ப்பாயங்களின் அதிகாரத்தை திறம்பட பலவீனப்படுத்துகிறது. இந்த மசோதா அரசியலமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மதச்சார்பற்ற கொள்கைகளை மீறுவது மட்டுமல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குப் பதிலாக நியமன உறுப்பினர்கள் மற்றும் ஒரு நியமனத் தலைவரைக் கொண்டு ஜனநாயக விழுமியங்களை அச்சுறுத்துகிறது.
மத சுதந்திரம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி மற்றும் ஜனநாயகக் கோட்பாடுகள் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் சமரசம் செய்யப்படக் கூடாது" என்றார்.
கடந்த வாரம், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.