நாடுமுழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் 62,375 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 36-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகளை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கொரோனா தொற்றுக்கு தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கணிசமான முறையில் குறைந்துள்ளது. கடந்த மே 9ம் தேதி 37 லட்சத்துக்கும் அதிகமானோர், கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 7,93,708 ஆக குறைந்துள்ளது. 


சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை (Active Cases) தொடர்ந்து குறைவதால், மருத்துவ உள்கட்டமைப்பு வசதியை மேலும் வலுப்படுத்தி, கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் போன்ற அதிக ஆபத்துள்ள கொரோனா நோயாளிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த முடியும். இதன், மூலம் வரும் நாட்களில் கொரோனா இறப்புகளை கணிசமான முறையில் குறைக்க முடியும். 


 


இது ஒருபுறம் இருக்க, அமெரிக்கா, இங்கிலாந்து, தெற்கு ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் சரிந்து கிடந்த தினசரி கொரோனா தொற்று, கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. நான்கு மாதங்களுக்குப் பிறகு, இங்கிலாந்து நாட்டில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 10,000-ஐத் தாண்டியுள்ளது. 




 


மாநிலங்கள் விவரம்: கடந்த 24 மணி நேரத்தில் கேரளா மாநிலத்தில் அதிகபட்சமாக (12,469) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, மகாராஷ்டிராவில் 9,830 பேரும், தமிழ்நாட்டில் 9118 பேரும், கர்நாடகாவில் 5983 பேரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


தேசியளவில் வாராந்திர தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் விகிதம் (Weekly Positivity Rate) 3.99 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் (Daily Positivity Rate) 3.48 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. தொற்று உறுதி விகிதம் 5%க்கும் குறைவாக இருந்தால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கலாம் என மத்திய அரசு முன்னதாக தெரிவித்து இருந்தது.




கொரோனா ஊரடங்கில் பெருமளவிலான தளர்வுகளை மாநிலங்கள் அறிவித்து வருகின்றன. தமிழ்நாடு உட்பட நாட்டின் 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இந்த விகிதம் 5%க்கும் அதிகமாக உள்ள காரணத்தில், மாவட்ட அளவிலான கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா தொற்று விகிதம் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் ஊரடங்கில் கூடுதல் தாளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்தது. கர்நாடகாவில் தொற்று விகிதம் அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் மட்டும் 21ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. 


மாநில அளவிலான முழு ஊரடங்கு அமலில் இருந்த கேரளாவில், நேற்று முதல் உள்ளூர் மட்ட அளவிலான கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த யுக்தியின் கீழ், 8%க்கும் குறைவாக தொற்று விகிதம் உள்ள உள்ளாட்சி அமைப்பு பகுதிகள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கும். கொரோனா தொற்று உறுதி விகிதம் 8- 20%க்கு இடையே உள்ள உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும். கொரோனா உறுதி விகிதம் 20க்கும் அதிகமாக இருக்கும் பகுதிகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.          


கவலை அளிக்கும் வடகிழக்கு மாநிலங்கள்: 


எட்டு சிறிய மாநிலங்களைக் கொண்ட வடகிழக்கு இந்தியாவில் சிக்கிம், மேகாலயா, மணிப்பூர் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் கொரோனா தொற்று விகிதம் 5%க்கும் கூடுதலாக உள்ளது.




இந்தியாவில், தற்போது மிசோரம், அந்தமான் & நிகோபார் பகுதிகளில் மட்டும் தான் அன்றாட கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் அதிகரித்துக் காணப்படுகின்றன.