கோடைக் காலங்களில் பலரும் அதிகமாக விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அது மாம்பழம் தான். முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் பல வகைகளில் சந்தையில் கிடைக்கும். ஒவ்வொரு வகைக்கும் ஒரு தனி சுவை மற்றும் விலை உண்டு. அந்தவகையில் ஒரு அரிய வகை மாம்பழத்திற்கு 6 நாய்கள் மற்றும் 4 நபரை ஒரு தம்பதி பாதுகாப்பாக நிறுத்தியுள்ளது. அப்படி அந்த மாம்பழத்தில் என்னதான் சிறப்பு?
மத்திய பிரதேச மாநிலத்தில் சங்கல்ப் பரிஹார்- ராணி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பாக சென்னைக்கு பயணம் செய்துள்ளனர். அப்போது அவர்களிடம் ஒருவர் இரு மா செடிகளை கொடுத்து பத்திரமாக பராமரித்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இந்த மரத்தை இத்தம்பதி அவர் கூறியது போல் தங்களுடைய வீட்டில் நட்டு நன்றாக வளர்த்து வந்துள்ளனர்.
இந்தச் சூழலில் கடந்த ஆண்டு முதல் இந்த மரத்தில் மாம்பழம் காய்க்க தொடங்கியுள்ளது. அப்போது இந்த மாமரத்தின் பழங்கள் ரூபி ரெட் நிறத்தில் இருந்துள்ளது. இதை பார்த்து ஆச்சரியம் அடைந்த பரிஹார் இந்த வகை மாம்பழம் தொடர்பாக இணையத்தில் தேடியுள்ளார். அப்போது தான் இது ஜப்பானில் மட்டும் கிடைக்கும் அரிய வகை மியாசாகி மாம்பழம் என்று அறிந்து கொண்டுள்ளார்.
இந்த மாமரம் தொடர்பாக தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் இம்மாம்பழத்தை திருடி சென்றுள்ளனர். இதன் காரணமாக இந்த அரிய வகை மாம்பழங்களை பாதுகாக்க 6 நாய்கள் மற்றும் 4 நபர்களை வேலைக்கு எடுத்துள்ளனர். ஏனென்றால் இந்த மாம்பழ வகை சர்வதேச சந்தையில் ஒரு கிலோ 2.7 லட்சம் வரை விலை மதிப்பு உடையது. ஆகவே இதை இப்படி பாதுகாக்க அந்த தம்பதி திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த வகையின் ஒரு பழத்தை மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 21 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க முன்வந்துள்ளதாக தம்பதிகள் தெரிவிக்கின்றனர்.
மியாசாகி மாம்பழத்தின் சிறப்பு என்ன?
ஜப்பானில் உள்ள மியாசாகி நகரில் காய்க்கும் மாம்பழம் என்பதால் இதற்கு அப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு ‘சூரியனின் முட்டை’ என்ற மற்றொரு பெயரும் உள்ளது. இது மற்ற மாம்பழங்களைவிட 15 % அதிக சர்க்கரை அளவை கொண்டுள்ளது. அத்துடன் இந்த வகை மாம்பழத்தின் ஒரு பழத்தின் எடை சுமார் 350 கிராம் வரை இருக்கும். இதில் பீடா கேரோடீன் மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளதால் கண் சோர்வு உள்ளவர்களுக்கு இது நல்ல மருந்தாக அமைகிறது. இந்த வகை மாம்பழங்கள் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மரங்களில் காய்க்கும் தன்மை உடையது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க: Baba Ramdev: அலோபதி அவதூறு: யோகா குரு பாபா ராம்தேவ் மீது வழக்கு பதிவு!