தடுப்பூசிகள் கையிருப்பு, நோய்த் தொற்று பாதிப்பு, சம அளவிலான தடுப்புமருந்து விநியோகம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தாராளமயமாக்கப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட தேசிய கொவிட்-19 தடுப்பூசி வியூகத்தை வகுத்துள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
"தனியார் தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமளிப்பதை அடிப்படையாகக் கொண்டு மாறுபட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக, தடுப்பூசி உருவாக்குவதில் சந்தையில் போட்டித் தன்மை உருவாகும். தடுப்பூசிகளின் தரம் மற்றும் மலிவு விலை உறுதி செய்யப்படும். வெளிநாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்களும் நுழைய ஊக்கப்படுவர்”என்று தெரிவித்தது.
முன்னதாக, நாட்டின் கோவிட்-19 மேலாண்மை குறித்து தானாக முன்வந்து வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையை கடுமையாக சாடியது. கொரோனா தடுப்பூசிகளுக்கு எதன் அடிப்படையில் மாறுபட்ட விலை நிர்ணயிக்கப்பட்டது என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க கடந்த ஏப்ரல் 30ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
"AstraZeneca தடுப்பூசி நிறுவனம் அமெரிக்க குடிமக்களுக்கு மிகக் குறைந்த விலையில் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இந்தியர்கள் ஏன் கூடுதல் கட்டணங்களை செலுத்த வேண்டும்? மத்திய அரசுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி 150 ரூபாய் என்ற விலையிலும், மாநிலங்களுக்கு ரூ .300 அல்லது 400 என்ற விலையிலும் விற்கின்றனர். இந்த கூடுதல் கட்டணங்களை இந்த தேச மக்கள் ஏன் செலுத்த வேண்டும்" என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
புதிய தடுப்பூசி வியூகத்தின் கீழ், தடுப்பு மருந்துகளை நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் முறைசாரா விவாதங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விலையில் தடுப்பூசிகளை பெறுவது உறுதி செய்யப்படும். 18 வயது முதல் 45 வயதினருக்கு கோவிட் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அநேக மாநில அரசுகள் தெரிவித்துள்ளன . இதனால், அனைத்து குடிமக்களுக்கும் இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்படும்" என்று தெரிவித்தது.
மேலும், மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை நியாயமான, நீதியான, சமமான வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டது எனவும், உச்சநீதிமன்றம் அதில் தலையிட தேவையில்லை என்றும் தனது பதில் மனுவில் தெரிவித்தது.
இந்தியா தடுப்பூசி திட்டம்:
மே 1 முதல் பரவலாக்கப்பட்ட மற்றும் விரிவுபடுத்தப்பட்ட மூன்றாம் கட்ட கொவிட்-19 தடுப்புமருந்து திட்டத்தை இந்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ், தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தங்களது விநியோகத்தில் 50 சதவீதம் வரை மாநில அரசுகளுக்கும், வெளி சந்தைக்கும், முன்னரே நிர்ணயிக்கப்பட்ட விலையில் வழங்க தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. 50 சதவீத தடுப்பு மருந்துகளை இந்திய அரசுக்கு அவர்கள் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தடுப்பு மருந்துகளை நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யவும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் எந்த பிரிவினருக்கும் தடுப்பூசி வழங்கவும் மாநிலங்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டது.