India Corona Update:  இந்தியாவில் நேற்று 10,753 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று 10,093 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு இன்று குறைந்துள்ளது. 


கொரோனா


கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலின் காரணமாக ஹரியானா, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  


கேரளாவில் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், பிற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசத்தை கட்டாயமாக அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தேசிய தலைநகரான டெல்லியில் மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் மருந்தகங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறு சுகாதாரத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஒரே நாளில் 10,093 பேருக்கு பாதிப்பு


இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 10,093  பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 10,753 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று 10,093-ஆக குறைந்துள்ளது.  இதனால் மொத்தமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 57,542-ஆக பதிவாகியுள்ளது.


நேற்று முன்தினம் அதிகபட்சமாக 11,109 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு அதிகமாக பதிவான தொற்று நிலவரம் ஆகும். 


மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 6,248 பேர் கடந்த 24 மணி நேரத்தில் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 4.42 கோடி பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அதில் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி விகிதம் 3.39 சதவிகிதமாக உள்ளது. பாதிப்புக்குள்ளானர்களின் வார விகிதம் 2.97 சதவிகிதமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4.48 கோடியாக உள்ளது.


27 பேர் உயிரிழப்பு


மேலும், கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 091ஆக உள்ளது. கொரோனா பாதிப்பிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். அதில்  டெல்லியில் 6 பேரும், மகாராஷ்டிராவில் 4 பேரும், ராஜஸ்தானில் 3 பேரும், கேரளாவில் 6 பேரும், சத்திஸ்கர், குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு உயிரிழப்புகளும் பதிவாகி உள்ளன.   


கடந்த 24 நேரத்தில் 1.79 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை, 220.66 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 




மேலும் படிக்க


Atiq Ahmad: போலீசார் முன்பே முன்னாள் எம்.பி. சுட்டுக்கொலை..! உச்சபட்ச பதற்றத்தில் உத்தரப்பிரதேசம்..!144 தடை அமல்..!