கடந்த 2020ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை நிலைகுலைய வைத்தது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. இதை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்த நிலையில், விஞ்ஞான உலகின் தொடர் முயற்சியின் காரணமாக பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.


மீண்டும் அதிகரிக்கும் கொரோனா அச்சம்:


இருப்பினும், பல்வேறு வைரசுகள் உருவாகி மக்களை தொடர்ந்து அச்சுறுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 1134 பேருக்கு புதியதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,026ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவரின் விகிதம் 1.19 சதவிகிதமாக உள்ளது. 


கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அதில் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி விகிதம் 1.09 சதவிகிதமாக உள்ளது. பாதிப்புக்குள்ளானர்களின் வார விகிதம் 0.98 சதவிகிதமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4.46 கோடியாக உள்ளது.


இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை:


இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 813ஆக உயர்ந்துள்ளது. சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இறப்பு பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 831 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது.


இதுவரை, 92.05 கோடி முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை, 220.65 கொரோனா தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு மட்டும் இன்றி காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது.


H3N2 வைரஸ்:


சமீபத்தில், H3N2 வைரஸ் பெரும் அச்சத்தை கிளப்பியது.  இன்ஃப்ளூயன்ஸா (குளிர்காய்ச்சல்) ஏ வைரஸின் துணை வகையான H3N2, இந்தியாவின் இரண்டு உயிர் பலிகளை வாங்கியது. ஹரியானாவில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் கர்நாடகாவில் உயிரிழந்தார்.


இந்த வைரஸினால் ஏற்பட்ட காய்ச்சலால் நாடு முழுவதும் 451 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. பொதுவாக, வானிலை கடும் குளிரில் இருந்து வெப்பமான சூழலுக்கு மாறும்போது இம்மாதிரியான காய்ச்சல் ஏற்படும்.


மத்திய அரசு நடவடிக்கை:


இதற்கு மத்தியில், மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார்.


அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, ”கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக  கடந்த சில வாரங்கள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் நேற்று வரை  3,264 பேர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் இந்த பாதிப்பானது அதிகரித்துள்ளது. மேலும் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை அடைந்த வெற்றிகளை இழக்காமல் தொற்றுநோயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது தற்போது இருக்க சூழ்நிலையில் அவசியமானதாக உள்ளது” என்றார்.