காஷ்மீரில் நிலநடுக்கத்திற்கு மத்தியில் மருத்துவமனையில் மருத்துவர்கள் பிரசவம் பார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


காஷ்மீரில் நிலநடுக்கம்:


ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் பல வட இந்திய மாநிலங்களில் கூட உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.8 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் சுமார் இரண்டு நிமிடங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது. இதனால் பல கட்டிடங்கள் குலுங்கின. இந்நிலையில், காஷ்மீரில் அனந்த்நாக் பகுதியில் நிலநடுக்கத்திற்கு மத்தியில், மருத்துவர்கள் பிரசவம் பர்த்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.






பிரசவத்தின் போது நிலநடுக்கம்:


அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெஹாராவில் உள்ள அரசு மருத்துவமனையில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அறுவைசிகிச்சை அறையில் இரண்டு மருத்துவர்கள், இரண்டு உதவியாளர்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் ஆகியோர் இருந்தனர். அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால், மருத்துவமனை கட்டிடத்தோடு அங்கிருந்த சாதனங்கள் அனைத்தும் குலுங்கியுள்ளன. சில விநாடிகளில் அங்கு மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.


நிதானமாக செயல்பட்ட மருத்துவர்கள்:


ஆனாலும், நிதானமாக இருந்த மருத்துவர்கள் கடவுளை பிரார்த்தனை செய்ய அடுத்த சில விநாடிகளில் மின்சாரம் வந்துள்ளது. தொடர்ந்து, அந்த பெண்ணுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை ஆரோக்கியமாக எடுத்துள்ளனர். தற்போது தாயும், சேயும் பத்திரமாக உள்ளனர். பதற்றமான சூழலிலும் நிதானமாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு, மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் பாராட்டு தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பான ட்விட்டர் பதிவோடு, பிரசவத்தின் போது நிலநடுக்கம் ஏற்பட்டது தொடர்பான வீடியோவையும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரும் பகிருந்து வர, அந்த மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.