கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. அத்தமீறலின் உச்சக்கட்டமாக, கடந்த 2020ஆம் ஆண்டு, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 38 பேர் உயிரிழந்தனர். ஆனால், 4 பேர் மட்டுமே உயிரிழந்ததாக சீன அரசு கூறி வருகிறது.


இந்த விவகாரத்தில் தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அதன் காரணமாக இருதரப்பு நல்லுறவும் பாதிக்கப்பட்டுள்ளது. 


பதற்றத்தை ஏற்படுத்திய கல்வான் மோதல்:


கல்வான் மோதலை தொடர்ந்து, இந்திய - சீன எல்லைபகுதியில் 68,000க்கும் அதிகமான ராணுவ வீரா்கள் இந்திய விமானப் படை விமானங்கள் மூலமாக மிகக் குறைந்த காலகட்டத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், 90 பீரங்கிகள், சுமாா் 330 தாக்குதல் போா்த் தளவாடங்கள் உள்ளிட்டவை எல்லைப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.


இருதரப்பு மோதலுக்குப் பிறகு ரஃபேல், மிக்-29, சுகோய்-30 எம்கேஐ, ஜாகுவாா் ரக போா் விமானங்கள் எல்லைப் பகுதிகளில் தொடா் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. மோதல் ஏற்பட்ட உடனேயே, எதிரிகளின் போா் விமானங்களைத் தாக்கி அழிக்கவல்ல ஏவுகணைகளையும் இந்திய விமானப்படையானது எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தியது.


முடிவுக்கு வருகிறதா இந்திய, சீன எல்லை பிரச்னை?


இந்திய, சீன நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பிரச்னையை தீர்க்க இரண்டு நாடுகளும் அரசியல் ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. 


அதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் மாதம் 13, 14 தேதிகளில், இரு நாடுகளுக்கிடையே ராணுவ தளபதிகள் மட்டத்தில் 19ஆவது கட்ட பேச்சுவார்த்தை, இந்திய எல்லையில் உள்ள சுஷுல்-மோல்டோவில் நடைபெற்றது.


பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முக்கிய முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், "மேற்கு செக்டாரில் இந்திய சீன எல்லை (உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு) பகுதியில் மீதமுள்ள சச்சரவுகளை தீர்ப்பது குறித்து இரு தரப்பும் நேர்மறையான, ஆக்கபூர்வமான, ஆழமான பேச்சுவார்த்தை மேற்கொண்டன. 


தலைமையின் வழிகாட்டுதலின்படி, வெளிப்படையான, முன்னோக்கி எடுத்து செல்லும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.
மீதமுள்ள பிரச்னைகளை விரைவாக தீர்க்கவும், ராணுவ மற்றும் தூதரக வழியாக பேச்சுவார்த்தையை விரைவாக முன்னேடுக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


இரு தரப்பிலான 18ஆவது கட்ட பேச்சுவார்த்தை சீன எல்லையில் உள்ள சுஷுல்-மோல்டோவில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது, இருதரப்பு உறவுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எல்லைப் பகுதிகளில் அமைதியை மீட்டெடுக்கும் நோக்கில் மேற்கு செக்டாரில் இந்திய, சீன நாடுகளுக்கிடையே நிலவும் பிரச்னகளை தீர்ப்பது குறித்து இரு தரப்பும் வெளிப்படையான, ஆழமான பேச்சுவார்த்தை 
மேற்கொண்டன.