நாட்டின் தலைநகர் டெல்லியில் இன்று அதாவது ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி ஜி-20 திரைப்பட விழா தொடங்குகிறது. மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் இந்திய சினிமாவின் பிதாமகன் எனப்படும் சத்யஜித் ரேவின் திரைப்படமான 1955ஆம் ஆண்டு வெளியான ”பதேர் பாஞ்சாலி” திரைப்படம் மூலம் இந்த திரைப்பட விழா தொடங்கவுள்ளது.
இந்திய சர்வதேச மையம் (IIC) மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் G20 செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வை மூத்த நடிகர் விக்டர் பானர்ஜி மற்றும் G20 ஷெர்பா அமிதாப் காந்த் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
இந்திய சர்வதேச மையம் (IIC) மற்றும் வெளியுறவு அமைச்சகம் இணைந்து G20 திரைப்பட விழாவை 17 நாட்களுக்கு நடத்துகிறது. இந்த திரைப்பட விழா ஆகஸ்ட் மாதம் 16 முதல் செப்டம்பர் மாதம் 2 வரை டெல்லியில் நடைபெறுகிறது.
ஐஐசியின் இயக்குனர் கேஎன் ஸ்ரீவஸ்தவா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “இந்தியாவின் குடியரசுத் தலைவரின் கருப்பொருளான வசுதைவ குடும்பம் (ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்) என்ற தலைப்பில் விருது பெற்ற திரைப்படங்கள், நாட்டில் உள்ள ஒவ்வொருவரது பிரச்சினைகளையும் கவலைகளையும் பிரதிபலிக்கின்றன, அடையாளக் கேள்விகளை வழிநடத்துகின்றன, நினைவுகளுடன் ஈடுபடுகின்றன, சமூக அரசியல் வெளிப்படுத்திய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. அதேபோல், இந்தியா மட்டுமில்லாது அமெரிக்காவில் இருந்து 'தி கதீட்ரல்', தென் கொரியாவில் இருந்து 'டிசிஷன் டு லீவ்' மற்றும் துருக்கியில் இருந்து 'நோவா லேண்ட்' ஆகியவை திருவிழாவின்போது திரையிடப்படவுள்ளது. நதாலியா சியாம் இயக்கிய 'ஃபுட்பிரின்ட்ஸ் ஆன் வாட்டர்' என்ற பிரிட்டிஷ் திரைப்படத்துடன் ஜி20 திரைப்பட விழா செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி நிறைவடைகிறது.
பதேர் பாஞ்சாலி
சத்யஜித் ரேயின் முதல் திரைப்படமான 'பதேர் பாஞ்சாலி' 1929 ஆம் ஆண்டு பிபூதிபூஷன் பந்தோபாத்யாயின் பதேர் பாஞ்சாலி என்ற பெயரில் வெளியான பெங்காலி புத்தகத்தின் தழுவி எடுக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு மொழி திரையுலகினரும் இன்று வரை கொண்டாடிக்கொண்டு இருக்கும் இயக்குநர்களில் சத்யஜித் ரேவிற்கு எப்போதும் சிவப்புக் கம்பளம்தான். இவரது பரவலான அங்கீகாரத்தைப் பெற்ற முதல் இந்தியத் திரைப்படங்களில் ஒன்றான 'பதேர் பாஞ்சாலி' இந்தியாவில் சினிமா கலாச்சாரத்தை உருவாக்கியதில் பெறும் பங்கு வகித்தது. குறிப்பிடத்தக்கது. மூன்றாவது ஆண்டு தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த திரைப்படத்திற்கான கோப்பையை இது பெற்றது. 2005 ஆம் ஆண்டில் டைம் பத்திரிகையின் 100 சிறந்த படங்களில் இடம்பிடித்தது.