77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று கொடி ஏற்றிவிட்டு, நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது, முக்கிய நீதிமன்ற தீர்ப்புகளை பிராந்திய மொழியில் மொழி பெயர்த்து வெளியிட நீதித்துறை எடுத்த நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.


"தாய்மொழியில் கிடைக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள்"


இகுகுறித்து விரிவாக பேசிய பிரதமர் மோடி, "இனி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் முக்கிய பகுதிகள் ஒருவரது தாய்மொழியில் கிடைக்கும் என்பதற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பிராந்திய மொழிகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது" என்றார்.


சுதந்திர தின நிகழ்ச்சிக்கு விருந்தினர்களில் ஒருவராக வந்திருந்த இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், பிரதமர் மோடியின் பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கைக்கூப்பி வணக்கம் தெரிவித்தார்.


இந்த ஆண்டு குடியரசு தினம் மற்றும் உச்ச நீதிமன்ற தொடக்க தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அதன் 9,423 தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் உச்ச நீதிமன்றம் பதிவேற்றியது. இதுகுறித்து விவரித்திருந்த தலைமை நீதிபதி சந்திரசூட், "இதுவரை, 9,423 தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் 8,977 தீர்ப்புகள் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.


தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்புகள்:


உச்ச நீதிமன்றம் இயங்க தொடங்கியதில் இருந்து, அனைத்து மொழிகளிலும் மக்கள் அணுகக்கூடிய வகையில் மொத்தம் 35,000 முக்கிய தீர்ப்புகளை மொழி பெயர்ப்பதே எங்கள் இலக்கு. இந்தியை தவிர, தீர்ப்புகள் இப்போது உச்ச நீதிமன்ற இணையதளத்தில் ஒரியா, குஜராத்தி, தமிழ், அசாமிஸ், காசி, கரோ, பஞ்சாபி, நேபாளி மற்றும் வங்கம் ஆகிய மொழிகளில் கிடைக்கின்றன. மேலும் பல மொழிகளும் இந்த பட்டியலில் விரைவில் சேர்க்கப்படும்.


நீதித்துறையை நேரடியாக மக்களின் வீட்டுக்கே கொண்டு செல்வதும், அவர்களின் தாய்மொழியில் தீர்ப்புகளை கிடைக்க வைத்து சட்டச் செயல்முறைகளைப் புரிந்துகொள்வதே இந்த முயற்சியின் நோக்கமாகும்" என்றார்.


பிராந்திய மொழிகளில் கல்வியை வழங்குவதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, உச்ச நீதிமன்றம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை மேற்கோள் காட்டியும் பேசியுள்ளார். 


பிரதமர் மோடியின் தேர்தல் வாக்குறுதிகள்:


கடந்த 10 ஆண்டுகளில், தனது அரசாங்கத்தின் சாதனைகளை விளக்கும் வகையில் பிரதமர் மோடியின் உரை அமைந்தது. தனது ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ள திட்டங்களைப் பற்றியும் விரிவாகப் பேசினார். 


அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஐந்து முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ளார். திறன் மேம்பாடு தொடங்கி பொருளாதாரம் வரையில் பல முக்கிய அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன.