இந்திய சீன படை தளபதிகளுக்கிடையேயான 14-வது சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. ஆனால் இந்த முறை அதிக திருப்திகரமாக தெரிகிறது என்று இருநாட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  


நேற்று, சீனப் பகுதியில் உள்ள சுஷுல்-மோல்டோ எல்லை சந்திப்புப் புள்ளியில் நடைபெற்றது. இதில், இருதரப்பு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறைகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேற்கு பகுதியில் (Western Sector) எல்லை கட்டுப்பாட்டு கோட்டை (எல்ஏசி) சார்ந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கு இரு தரப்பும் வெளிப்படையான மற்றும் ஆழமான கருத்துகளைப் பரிமாறிக் கொண்டன.  




முன்னதாக, கிழக்கு லடாக் பகுதியில் இந்திய- சீன படைகளுக்கு இடையே கடுமையான மோதல் போக்கு நிலவியது.  கடந்த ஆண்டு மே மாத தொடக்கத்தில்,  கல்வான் பள்ளத்தாக்கில் சீனப்படையினர் இடையூறு செய்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். சீன தரப்பில் நான்கு வீரர்கள் உயரிழந்ததாகவும் கூறப்பட்டது.  இதைத் தொடர்ந்து, மே மாத மத்தியில், மேற்கு பகுதியில் கொங்கா லா, கோக்ரா, பான்காங் ஏரியின் வடகரை ஆகிய  இடங்களில், சீனத்தரப்பு இந்திய எல்லைக்குள் ஊடுருவ பல முறை முயற்சிகள் மேற்கொண்டன. ஆகஸ்ட் மாத இறுதியில் சீன ராணுவம் பான்காங் ஏரியின் தென்கரைப் பகுதியில் மீண்டும் ஊடுருவும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.  




இதனையடுத்து, இந்திய சீன படை தளபதிகளுக்கிடையேயான- பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்தாண்டு,அக்டோபர் மாதம் நடைபெற்ற 13வது கட்டப் பேச்சுவார்த்தையின் போது , இந்திய ராணுவம் தரப்பில் இருந்து வழங்கப்பட்ட ஆக்கப்பூர்வமான பரிந்துரைகள் எதனையும் சீனா தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், இந்த பேச்சுவார்த்தை குறித்த கூட்டு செய்திக்குறிப்பு கூட அப்போது வெளியிடப்படவில்லை 


14-வது சுற்று பேச்சுவார்த்தையில் உறுதியான ஆக்கப்பூர்வமான உடன்பாடுகள் எட்டப்படவில்லை. இருப்பினும், தளபதிகளின் மட்டத்திலான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையை விரைவில் நடத்துவது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. 


நேற்றைய சந்திப்பு குறித்து, இந்திய- சீன வெளியிட்ட கூட்டு செய்திக் குறிப்பில்,    அரசு தலைவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, மீதமுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று இருதரப்பும் ஒப்புக்கொண்டன. மேற்கு பகுதி எல்லை கோட்டை ஓட்டி அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுப்பதற்கும் இருதரப்பு உறவுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் இது உதவும்.


முந்தைய முடிவுகளை ஒருங்கிணைக்கவும், குளிர்காலம் உள்ளிட்ட பருவங்களில் மேற்கு பகுதியில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையைப் பராமரிக்க பயனுள்ள முயற்சிகளை எடுக்கவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டன. நெருங்கிய தொடர்பில் இருக்கவும், ராணுவ மற்றும் ராஜாங்க வழிகள் மூலம் உரையாடலைப் பேணவும், மீதமுள்ள பிரச்சினைகளுக்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை விரைவில் உருவாக்கவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்" என்று தெரிவிக்கப்பட்டது. 




குளிர்கால ஒலிம்பிக்:  இருப்பினும், சர்வதேச நிலைமையை கருத்தில் கொண்டு இருதரப்பு உறவுகளில் சாதகமான சூழலை உருவாக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு, உதாரணமாக, சீனாவின் பெய்ஜிங்கில் வரும் பிப்ரவரியில் திட்டமிடப்பட்டுள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க இருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.






சீனாவில் மத சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகளை கண்டித்து அமெரிக்கா, ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகள்  ராஜதந்திர ரீதியான புறகணிப்பு (diplomatic boycott) செய்வதாக அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும்,  வர்த்தகம் மற்றும் முதலீடு சார்ந்த விஷயங்களில் பரஸ்பர ஒத்துழைப்பு வலுப்படுத்தும் முயற்சிகளில் இரு தரப்பினரும் தீவிரமாக இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.